கடலில் நீந்தச் சென்ற கனேடிய பெண்... கண்ணில் சிக்கிய அபூர்வ காட்சி
கடலில் நீந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ள கனேடிய பெண் ஒருவர், தற்செயலாக, கடல் சிங்கம் ஒன்றைக் கவனித்துள்ளார்.
அந்த கடல் சிங்கம் ஏதோ பிரச்சினையில் சிக்கியுள்ளதுபோல் அவருக்குத் தோன்றவே, அந்த காட்சியை அவர் படம் பிடித்துள்ளார். அப்போது அவருக்குத் தெரியாது, அவர், அபூர்வ காட்சி ஒன்றைப் படம் பிடிக்கிறார் என்பது!
கடலில் நீந்தச் சென்ற கனேடிய பெண்ணின் கண்ணில் சிக்கிய காட்சி
கனேடியரான Lindsay Bryant, வாரத்திற்கு மூன்று முறை கடலில் நீந்தும் வழக்கம் கொண்டவர். பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவர் தீவிலுள்ள Nanaimo நகருக்கருகில், பசிபிக் பெருங்கடலில் அவர் நீந்தச் செல்வது வழக்கம்.
இம்மாதம் 16ஆம் திகதி, தனது வழக்கத்தின்படியே நீந்திக்கொண்டிருக்கும்போது, சுமார் 100 மீற்றர் தொலைவில் கடல் சிங்கம் ஒன்று தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருப்பதை கவனித்துள்ளார் Lindsay.
என்ன நடக்கிறது என்பது புரியாததாலும், அந்த கடல் சிங்கம் வெகு தொலைவிலிருந்ததாலும், தனது மொபைல் போனைப் பயன்படுத்தி அதை ஜூம் செய்து பார்த்துள்ளார் அவர்.
கண்ணில் சிக்கிய அபூர்வ காட்சி
அப்போதுதான் அவருக்குத் தெரிந்துள்ளது, அந்த கடல் சிங்கம் வேறொரு உயிரினத்துடன் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறது என்பது.
Lindsay கவனித்துப் பார்க்க, அது ஒரு ஆக்டோபஸ் என தெரியவர, ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளார் அவர். சுமார் ஐந்து நிமிடங்கள் அந்த போராட்டம் நீடித்துள்ளது. கடைசியில் கடல் சிங்கம்தான் சண்டையில் ஜெயித்ததாக நம்புகிறார் அவர்.
இந்த காட்சியைக் கண்ட கடல் விலங்கியல் நிபுணரான Anna Hall என்பவர், இத்தனை ஆண்டுகள் தன் வாழ்க்கையை தான் கடலிலேயே செலவிட்டும் இப்படி ஒரு அபூர்வ காட்சியை தான் கண்டதில்லை என்கிறார்.
கடல் சிங்கங்கள் ஆக்டோபஸை வேட்டையாடுவதும் உண்டு என்று கூறும் Anna Hall, ஆனால், கடலின் ஆழத்தில் அப்படி நடக்கலாம், ஆனால், கடல் மட்டத்தில் இப்படி ஒரு காட்சியைக் காண்பது மிகவும் அபூர்வம் என்கிறார்.
Lindsayயைப் பொருத்தவரை, தன் வாழ்நாளில் இப்படி ஒரு அபூர்வக் காட்சியை படம் பிடித்ததற்காக அவர் எப்போதும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |