கனடாவில் அதிகரித்துவரும் புற்றுநோய் போன்ற அபூர்வ வகை உயிர்க்கொல்லி நோய்
கனடாவில், அபூர்வ வகை, ஆனால் உயிரைக்கொல்லக்கூடிய ஒட்டுண்ணி ஒன்றால் உருவாகும் புற்றுநோய் போன்ற ஒரு நோய் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் காணப்படும் ஒரு நோய் alveolar echinococcosis (AE) என்னும் நோய். ஆனால், அது வட அமெரிக்காவில் 2010களுக்கு முன் ஆவணப்படுத்தப்படவில்லை.
இவ்வகை நாடாப்புழுக்களின் முட்டைகள் வயிற்றுக்குள் சென்றுவிட்டால், அவை உடல் உறுப்புகளுக்குள் சென்று பதுங்கிக்கொள்ளும். பிறகு அவற்றைக் கண்டுபிடிப்பது கடினம். முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிரைக் கொல்லக்கூடிய புற்றுநோய்க் கட்டிகள் போல அவை மாறிவிடும்.
தற்போது, ஆல்பர்ட்டாவில் இந்த வகை நோய் கவலையளிக்கக்கூடிய அளவில் பரவிவருவதாக ஆல்பர்ட்டா அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
ஏற்கனவே, 2013க்கும் 2020க்கும் இடையில், இதுவரை 17 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அந்த 17 பேருக்கும் அறுவை சிகிச்சை பலனளிக்காத நிலையில், ஒட்டுண்ணிகளுக்கான மருந்துகள் கொடுக்கப்பட்டன.
அவர்களில் ஒருவர் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பிரச்சினைகள் காரணமாக உயிரிழந்துவிட்டார். தற்போது திடீரென இந்த நோய் ஏன் ஆல்பர்ட்டாவில் அதிகரிக்கிறது என்பது அறிவியலாளர்களுக்கே நிச்சயமாக தெரியவில்லை.
ஒருவேளை, இப்பகுதியில் நாய்கள் அதிகரிப்புக்கும் இந்நோய் அதிகரிப்புக்கும்
தொடர்பு இருக்கலாம் என அவர்கள் கருதுகிறார்கள்.
ஆகவே, நாய்கள் மற்றும் வனவிலங்குகள் எதையாவது தொட்டால், கைகளை நன்றாகக்
கழுவுமாறும் சுய சுத்தத்தை கடைப்பிடிக்குமாறும் அவர்கள் மக்களை
அறிவுறுத்தியுள்ளார்கள்.