கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான்
கனடா அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியது.
இப்ராஹிம் ஜட்ரான் 95 ஓட்டங்கள்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த தங்களது கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி கனடாவை எதிர்கொண்டது.
முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ஓட்டங்கள் குவித்தது. இப்ராஹிம் ஜட்ரான் (Ibrahim Zadran) ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 95 ஓட்டங்கள் (5 சிக்ஸர், 7 பவுண்டரிகள்) விளாசினார். அடல் 32 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 44 ஓட்டங்கள் எடுத்தார்.

அபார வெற்றி
பின்னர் களமிறங்கிய கனடா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க, ஆப்கானிஸ்தான் 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மொஹம்மது நபி 4 விக்கெட்டுகளும், ரஷித் கான் 2 விக்கெட்டுகளும், முஜீப் மற்றும் ஓமர்சாய் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
போட்டிக்கு பின்னர் பேசிய அணித்தலைவர் ரஷித் கான் (Rashid Khan), "கடந்த இரண்டு ஆட்டங்களிலும் நாங்கள் தோற்கவில்லை. நாங்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டோம். நாங்கள் சில சிறந்த விடயங்களை செய்தோம். ஆனால், இந்த உலகக்கிண்ணத்தில் இருந்து நாங்கள் பெறும் சில நேர்மறையான விடயங்கள், மீண்டும் ஐசிசி போட்டிக்கு வரும்போது நாங்கள் தயாராக இருப்போம்" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |