இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரி விலக முடிவு! அடுத்து யார் தெரியுமா? வெளியான முக்கிய தகவல்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரவிசாஸ்திரி விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவிசாஸ்திரி வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின், பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் மட்டுமின்றி இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ஆகியோரும், வரும் டி20 உலகக்கோப்பை தொடரோடு விலகவுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக பிசிசிஐ இன்று லண்டன் செல்லவிருப்பதாகவும், இது குறித்து ரவிசாஸ்திரியிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பிசிசிஐ நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அப்படி ரவிசாஸ்திரி தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினால், அடுத்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
ஏனெனில் இவர் தலைமையிலான இளம் இந்திய அணி, சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஒருநாள் தொடரை வென்று, டி20 தொடரை இழந்தது.
இருப்பினும் இவர் தலைமையிலான இந்திய அணி சிறப்பான ஆட்டத்தைக் கொடுத்ததால், அவர் தான் அடுத்த இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளர் ஆக வேண்டும் என்று முன்னணி வீரர்கள் உட்பட ரசிகர்கள் பலரும் கூறி வந்தனர்.
ஆனால், இதை ராகுல் டிராவிட் ஏற்பாரா என்பது தெரியவில்லை. ஏனெனில் நேற்று தான் National Cricket Academy-க்கான பயிற்சியாளர் தெரிவு நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.