ரவி சாஸ்திரிக்கு கொரோனா... தனிமைப்படுத்தலில் இந்திய அணியினர்! தொடருமா இங்கிலாந்து உடனான டெஸ்ட்?
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் உள்ள நிலையில் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து-இந்தியா இடையேயான 4வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று மாலை வந்த கொரோனா பரிசோதனை முடிவில் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா பாதிப்பு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த பந்து வீச்சு பயிற்சியாளர் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் மற்றும் பியோதெரபிஸ்ட் நிதின் படேல் ஆகியோரை பிசிசிஐ மருத்துவக் குழு தனிமைப்படுத்தலில் வைத்துள்ளது.
அவர்கள் நான்கு பேரும் ஆர்டி-பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் மற்றும் அவர்கள் ஹோட்டலிலே தங்கியிருக்க வேண்டும் எனவும், மருத்துவக் குழு உறுதிசெய்யப்படும் வரை அவர்கள் இந்திய அணியுடன் பயணிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீதமுள்ள இந்திய அணியினருக்கு நேற்று இரவு மற்றும் இன்று காலை என இரண்டு Lateral Flow சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதில், தொற்று பாதிப்பு இல்லை என உறுதியான வீரர்கள் ஓவலில் நடந்து வரும் நான்காவது டெஸ்டின் 4வது நாள் போட்டியில் தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்பட்டனர் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.