Wow... வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் தரம் உயர்ந்த ஜடேஜாவுக்கு அடித்த ஜாக்பாட்
கிரிக்கெட் வாரிய வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் தரம் உயர்த்தப்பட்டுள்ள ரவீந்திர ஜடேஜாவுக்கு மாபெரும் ஜாக்பாட் அடித்துள்ளது.
மீண்டும் களத்தில் இறங்கிய ரவீந்திர ஜடேஜா
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த ஆசிய கோப்பை போட்டியின் இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால், அத்தொடரிலிருந்து விலகினார்.
இதனையடுத்து, காயம் ஏற்பட்ட காலில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் பல மாதங்கள் அவர் ஓய்வில் இருந்து வந்தார். சமீபத்தில் உடல் நலம் பெற்று மீண்டும் கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக வலை பயிற்சியை மேற்கொண்டார்.
சாதனை படைத்த ஜடேஜா
சமீபத்தில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் தொடரில் ஜடேஜா கலந்து கொண்டு விளையாடினார். இப்போட்டியில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுக்களை கடந்தார். கபில் தேவ்க்கு பிறகு, 5000 ரன்கள், 500 விக்கெட்டுக்களை கடந்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார் ஜடேஜா.
ஜடேஜாவுக்கு 'ஜாக்பாட்'
இந்திய கிரிக்கெட் வாரியம், வீரர்களை 4 பிரிவாக ஒப்பந்தம் செய்து ஊதியம் வழங்கி வருகிறது. இதில், ஏ பிளசில் இடம் பெறும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.7 கோடியும், ஏ கிரேடுக்கு ரூ.5 கோடியும், பி கிரேடுக்கு ரூ.3 கோடியும், சி கிரேடுக்கு ரூ.1 கோடியும் சம்பளமாக கொடுக்கப்படும்.
இந்நிலையில், 2022-ம் ஆண்டு அக்டோபரிலிருந்து 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான வீரர்களின் புதிய ஒப்பந்த பட்டியலை இறுதி செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது.
இதில், 'ஏ'பிரிவில் இருந்த ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 'ஏ பிளஸ்' கிரேடுக்கு தரம் உயர்ந்துள்ளார். இதனால், அவருக்கு கூடுதலாக ரூ.2 கோடி ஊதியம் வழங்கப்பட உள்ளது. 'பி' பிரிவில் இருந்த சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல், 'சி' யில் அங்கம் வகித்த 20 ஓவர் அணிக்கான கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இருவரும் 'ஏ'-க்கு முன்னேறி இருக்கிறார்கள்.