என் ஒட்டு மொத்த கிரிக்கெட் வாழ்க்கையை புரட்டி போட்ட தொடர் இது தான்! முதன் முறையாக ரவீந்திர ஜடேஜா பகிர்ந்த தகவல்
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றிய போட்டி குறித்து பேசியுள்ளார்.
உலகில் தலை சிறந்த ஆல் ரவுண்டர்களில், ரவீந்திர ஜடேஜாவின் பெயர் இருக்கும், அந்தளவிற்கு பவுலிங், பீல்டிங் மற்றும் பேட்டிங் என அனைத்திலும் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார்.
ஆனால், இவருடைய ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கை இவருக்கு எப்படி அமைந்தது தெரியுமா? இவரின் கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியதே அந்த இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் தான் என்று ரவீந்திர ஜடேஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதில், 2018-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டி தான் என்னுடைய வாழ்க்கையே திருப்பிய ஒரு போட்டி. ஏனெனில் அந்த போட்டியில் இங்கிலாந்து சூழ்நிலையை சமாளித்து உலகின் மிகச்சிறந்த பௌலிங் அட்டாக்கிற்கு எதிராக நான் ரன்களை அடித்ததும் என்னால் உலகின் எந்த ஒரு மைதானத்திலும் ரன் அடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் வந்தது.
அன்று முதல் என்னுடைய ஆட்டம் மாறியது, ஒருநாள் போட்டிகளில் விளையாடி வந்த ஹார்திக் பாண்ட்யாவுக்கு திடீரென்று காயம் ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக நான் விளையாடினேன்,
திறமையை வெளிப்படுத்தினேன். 2018 ஆம் ஆண்டிற்கு முன்னர் ஒன்றரை ஆண்டுகள் எனக்கு தூக்கமில்லாத இரவுகள் ஆகவே அமைந்தது. ஒவ்வொரு நாளும் காலையிலேயே 4 அல்லது 5 மணிக்கு எழுந்து நான் மீண்டும் அணியில் இடம் பிடிக்க என்ன பண்ண வேண்டும் ? என்ன செய்ய வேண்டும் ? நாம் மீண்டும் வலுவாக திரும்பி வர என்ன செய்ய வேண்டும் ? என்று யோசித்துக் கொண்டே இருப்பேன்.
அதனால் எனக்கு தூக்கம் கூட வராது. அதன் பிறகு நான் இங்கிலாந்து தொடரில் இடம் பெற்று என்னை நிரூபித்த பிறகு தான் எனக்கு நிம்மதியாக இருந்தது. வெளிநாட்டு தொடர்களில் நான் அணியில் இருந்தாலும் விளையாடாத நாட்கள் என்னை மிகவும் வேதனை அடைய வைத்தன.
அதன் பின்னர் நான் மெல்ல மெல்ல என்னுடைய திறனை வெளிக்கொணர்ந்து என்னுடைய திறமையை நிரூபித்து தற்போது பலமாக திரும்பி உள்ளேன் என்று கூறியுள்ளார்.