தோனி அன்று செய்த தவறு.. அவர் அதற்கு சரிப்பட்டு வரமாட்டார்: ரவிசாஸ்திரி
ஜடேஜா அணித்தலைவர் பதவிக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்றும், தோனி தனது பதவியை யாரிடம் தர வேண்டும் என்று யோசிக்காமல் போய்விட்டார் என்றும் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி குற்றம்சாட்டியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. ஐபிஎல் வரலாற்றில் CSK அணியின் மோசமான சாதனை இதுவாகும். இதற்கு காரணம் அணியில் வீரர்களின் தேர்வு சரியில்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஜடேஜாவின் தலைமை சரியில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
இந்நிலையில் CSK அணியின் இந்த நிலைக்கு காரணம் தோனியின் முடிவுதான் என்றும், 40 வயதை எட்டிவிட்ட தோனி பதவி விலகியது சரிதான், ஆனால் அதனை எப்போது யாரிடம் தர வேண்டும் என்பதை அவர் யோசிக்காமல் போய்விட்டார் என்றும் முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'ஜடேஜா அணித்தலைவர் பதவிக்கு சரிப்பட்டு வரமாட்டார். அவரைப் போன்ற வீரர்கள் களத்தில் நன்கு கவனம் செலுத்தி ஆட்டத்தை மாற்றி அமைக்கக் கூடியவர்கள். ஆனால் தற்போது அணித்தலைமையால் ஏற்பட்ட அழுத்தம் அணியை மட்டுமல்லாது, ஜடேஜாவின் ஆட்டத்தையும் பாதித்துவிட்டது.
கடந்த சீசனில் பேட்டிங்கில் finisher அவதாரம் எடுத்த அவர், இம்முறை பேட்டிங் செய்ய திணறுகிறார். தோனி பதவி விலகுவதாக இருந்திருந்தால் பாப் டூப்ளீசிஸை விட்டிருக்க கூடாது. அவரை அணியில் வைத்துக்கொண்டு அணித்தலைவராக நியமித்திருக்க வேண்டும். கைக்கு அருகில் இருந்த வாய்ப்பை விட்டுவிட்டு ஜடேஜாவை அணித்தலைவராக்கி தவறு செய்துவிட்டார்' என தெரிவித்துள்ளார்.