அவருக்கு கொஞ்சம் மரியாதை அளியுங்கள்! விராட் கோலிக்கு அம்பத்தி ராயுடு ஆதரவு
தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு அம்பத்தி ராயுடு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
மோசமான நிலையில் இந்திய அணி
இந்திய அணி அண்மையில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிகளில் மோசமாக விளையாடியது, அதிலும் குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் தோல்வி அடைந்தது.
இதையடுத்து அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரிலும் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
இந்த படுதோல்விகளுக்கு முக்கிய காரணமாக ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள்.
பிசிசிஐ-யின் புதிய விதி
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) இந்திய அணியின் வீரர்கள் யாராக இருந்தாலும் ஃபார்மில் இல்லையென்றால் கண்டிப்பாக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற விதிமுறையை கொண்டு வந்துள்ளது.
அதன்படி விராட் கோலி 2012ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் டெல்லி அணிக்கு திரும்பி விளையாடி வருகிறார். ஆனால் அந்த போட்டியிலும் அவர் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அம்பத்தி ராயுடு ஆதரவு
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு விராட் கோலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் X தளத்தில், "தற்போதைக்கு விராட் கோலி ரஞ்சி போட்டிகளில் விளையாட தேவையில்லை. அவருக்கு சிறிது நேரம் தேவை. அவரை யாரும் வற்புறுத்த வேண்டாம். அவருக்கு கொஞ்சம் மரியாதை அளியுங்கள். அவரை நம்புங்கள். அவரை தனியாக இருக்க விடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், விராட் கோலியின் திறமையை பாராட்டியுள்ள அம்பத்தி ராயுடு, 81வது சதம் அடித்த போதும் அவரது நுட்பம் நன்றாகவே இருந்தது. இனியும் அது நன்றாகவே இருக்கும் என்று ராயுடு கூறியுள்ளார்.
விராட் கோலிக்கு ஓய்வெடுக்க சிறிது நேரம் கொடுக்க வேண்டும் என்றும் அவரை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் ராயுடு வலியுறுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |