விஜய்யை பிரதமர் வேட்பாளராக்க முன்னெடுப்பு - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக்க முன்னெடுப்பு நடப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.
விஜய்யை வைத்து போலி செய்திகள்
கட்சி தொடங்கி 3 ஆண்டுகளில், சந்தித்த முதல் தேர்தலிலே இரு பெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் தவெக தலைவர் விஜய்.

கடந்த சில வாரங்களாக முதல்வர் விஜய் தமிழ்நாட்டில் செய்துள்ளதாக கூறி, பல்வேறு போலி செய்திகள் வட இந்திய மாநிலங்களில் உள்ள சமூகவலைத்தள பக்கங்களில் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பரப்பப்பட்டு வந்தது.
வட இந்தியாவில் வைரலாகும் முதல்வர் விஜய் குறித்த போலி செய்திகள் - தேசிய அளவில் முன்னிறுத்தப்படுகிறாரா?
இந்நிலையில், அதனை சுட்டிக்காட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் ஆக்க முன்னெடுப்பு நடப்பதாக தெரிவித்துள்ளார்.
விஜய்யை பிரதமர் வேட்பாளராக்க முன்னெடுப்பு
இது குறித்து பேசிய அவர், "முதலமைச்சர் விஜய் எப்படி செய்தார் பார்த்தீர்களா? அதையும் செய்தார் இதையும் செய்தார் எதையும் செய்வார் என செய்யாததை எல்லாம் narrative செய்ய போலி வீடியோக்களை தயார் செய்து, தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் இன்ஃப்ளூயன்சர்களை வைத்துக்கொண்டு விஜய் பிம்பத்தை கட்டமைத்ததை தவிர தவெக அரசு இந்த 75 நாட்களில் வேறு எதுவும் செய்யவில்லை.

இந்த மாய பிம்பத்தை வைத்து தான், 2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நம்ம முதல்வர் விஜய்யை முன்னிருந்த தவெக கட்சி முன்னெடுப்பு எடுத்து வருகிறது. டெல்லியில் இருப்பவர்கள் உடனடியாக விழித்துக்கொள்ள வேண்டும்.
பிரதமர் வேட்பாளராக விஜய்யை முன்னெடுப்பு செய்கிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியாது. எந்த வித வரலாறும், தியாகமும், மக்களுக்கான உரிமை போராட்டமும் இல்லாமல் ரீல்ஸ் மூலம் மூளை சலவை செய்து, நிழல் எதுவும் நிஜம் எதுவும் தெரியாமல் குழப்பி முதலமைச்சர் ஆகியுள்ளார்.
முதலமைச்சருக்கே தகுதியில்லாத அவரை தமிழ்நாடு முதல்வராக பெற்றுள்ள போது, போலி செய்திகளை ரீல்ஸ் மூலம் எல்லா மொழிகளிலும் இன்ஃப்ளூயன்சர்களை கூலிக்கு அமர்த்தி விஜய் விஜய் என கூப்பாடு போட வைத்து பாரத பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த தவெக முன்னெடுப்பு எடுத்து வருகிறது.
எது எப்படி இருந்தாலும், என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால் விஜய்யின் பருப்பு எங்கு வெந்தாலும், பிரதமர் மோடியிடம் வேகாது என்பதை கூறி நிறைவு செய்கிறேன்" என பேசியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |