இனி UPI மூலம் ரூ.10,000 மேல் அனுப்ப தாமதமாகும் - வருகிறது புதிய விதி
இனி UPI மூலம் ரூ10,000 மேல் பணம் அனுப்பும் போது 1 மணி நேர தாமதமாகும் வகையில் புதிய விதியை அறிமுகப்படுத்த RBI திட்டமிட்டுள்ளது.
UPI பணப்பரிவர்த்தனை
இந்தியாவில் நாளுக்கு நாள் UPI பணப்பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. வங்கி கணக்கில் பணப் பரிமாற்றம் செய்வது தொடங்கி பில் செலுத்துவது, ரீசார்ஜ் செய்வது என அனைத்திற்கும் UPI செயலிகளையே மக்கள் நம்பியுள்ளனர்.

Google pay, Paytm போன்ற UPI செயலிகள் மூலம், நொடிப்பொழுதில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும்.
UPI மூலம் நாளொன்றுக்கு 20 முறை பரிவர்த்தனை செய்ய முடியும். மேலும், நாளொன்றுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் பணம் அனுப்ப முடியும்.
இணைய நிதி மோசடி
அதேவேளையில் இணைய பரிவர்த்தனையை பயன்படுத்தி, நிதி மோசடி நடைபெறுவதும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் சுமார் ரூ.22,000 கோடி இணைய வழியில் பண மோசடி நடைபெற்றுள்ளது.
இதில், மோசடியாளர்கள், சமூகப் பொறியியல், ஆள்மாறாட்டம் மற்றும் வற்புறுத்தல் ஆகியவற்றைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களைத் தாங்களாகவே பணத்தை அனுப்பும்படி அழுத்தம் கொடுக்கின்றனர்.

அவசர உணர்வை உருவாக்கி, பாதிக்கப்பட்டவர் சிந்திப்பதைத் தடுக்க, அவர் மீது தொடர்ச்சியான உளவியல் அழுத்தத்தைப் பிரயோகிறார்கள்.
UPI போன்ற உடனடி வழிகள் மூலம் நிதி பரிமாற்றம் செய்யப்பட்டவுடன், அதை மீட்பது மிகவும் கடினமாகிறது. பணம் செலுத்துபவர் தரப்பில் தாமதமாகும் போது, அவர் மோசடியை உணர வாய்ப்பு ஏற்படுகிறது.
இவ்வாறாக மோசடியை தடுக்க UPI பரிமாற்றத்தின் போது புதிய விதியை அமுல்படுத்த RBI திட்டமிட்டு வருகிறது.
ரூ.10,000 அனுப்ப தாமதம்
இதன்படி, ரூ.10,000 க்கு அதிகமான தொகை UPI மூலம் அனுப்பப்படும் போது, அது பெறுபவரின் வங்கி கணக்கிற்கு செல்ல 1 மணி நேரம் தாமதமாகும்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் அனுப்பியவர் விரும்பினால், பரிவர்த்தனையை ரத்து செய்து விடலாம்.

அதேவேளையில், நம்பகமான தெரிந்த நபர்களை White list இல் சேர்த்து கொள்ளலாம். இந்த பட்டியலில் உள்ளவர்களுக்கு அனுப்பும் போது தாமதம் ஏற்படாது.
தனிநபர்களுக்கு அனுப்பும் போதுதான் இந்த தாமதம் இருக்கும் எனவும், மளிகைப் பொருட்கள், எரிபொருள் அல்லது ஆன்லைன் ஷாப்பிங் போன்றவற்றுக்காக அனுப்பும் போது இந்த தாமதம் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வங்கிகள், UPI சேவை நிறுவனங்கள், பய்னர்களிடம் RBI கருத்து கேட்டு வரும் நிலையில், விரைவில் நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |