கோஹ்லி படைக்கு முதல் அடி கொடுத்த சென்னை! அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த CSK
சென்னை அணிக்கெதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது. ஐபிஎல் தொடரின் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
அதன் படி முதல் போட்டி மும்பையில், சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. அதன் படி நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
சென்னை அணிக்கு துவக்க வீரர்களான ருத்ராஜ் கெய்வாட் மற்றும் பாப் டூப்ளிசிஸ் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 74 ஓட்டங்கள் குவித்த நிலையில், ருத்ராஜ் கெய்வாட் 33 ஓட்டங்களில் அவுட் ஆகினார்.
அதன் பின் வந்த சுரேஷ் ரெய்னா 18 பந்துக்கு 24 ஓட்டங்கள், அம்பத்தி ராயுடு 7 பந்தில் 14 ஓட்டங்கள் எடுத்து, அடுத்தடுத்து வெளியேற ஒரு கட்டத்தில் சென்னை அணி திணறிக் கொண்டிருந்தது.
ஆனால் ஒரு புறம் பாப் டூபிளிசிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அதன் பின் பெங்களூரு அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி சென்னை அணியை கட்டுப்படுத்தி வந்தனர்.
இதனால் சென்னை அணி 160-ஐ தாண்டினால் போதும் என்று எண்ணப்பட்டது. ஆனால் கடைசி ஓவரில் ரவீந்திர ஜடேஜா ஐந்து சிக்ஸர்கள் பறக்கவிட, ஒரு பவுண்டரி, ஒரு இரண்டு ஓட்டம், ஒரு நோ பால் என ஒட்டு மொத்தமாக அந்த ஓவரில் மட்டும் 37 ஓட்டங்கள் குவிக்கப்பட்டது.
இதன் மூலம் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 191 ஓட்டங்கள் குவித்தது. கடைசி ஓவரில் அதிரடியாக ஆடிய ரவீந்திர ஜடேஜா 28 பந்தில் 68 ஓட்டங்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து 192 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு துவக்க வீரர்களான விராட் கோஹ்லி 8 ஓட்டங்களிலும், டேவ்டட் படிக்கல் 34 ஓட்டங்களிலும் வெளியேற, அடுத்து வந்த வீரர்களான வாஷிங்டன் சுந்தார் 7 ஓட்டம், கிளான் மேக்ஸ்வேல் 22 ஓட்டம், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி மன்னன் டிவில்லியர்ஸ் 4 ஓட்டங்களில் வெளியேற, பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 122 ஓட்டங்கள் எடுத்து, 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் இருந்த பெங்களூரு அணி, இன்று முதல் தோல்வியை சந்தித்துள்ளது. அதே சமயம் இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி முதலிடத்தில் உள்ளது.