கடைசி வரை நிறைவேறாமல் போன தினேஷ் கார்த்திக்கின் ஆசை - சோகத்தில் ரசிகர்கள்
ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை சென்னை அணி வாங்க தவறியதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக கேப்டனாக செயல்பட்டு வந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கடந்தாண்டு தொடரில் அவரது தலைமையில் அடுத்தடுத்து அணி தோல்வியை சந்திக்க பதவி விலகினார். தொடர்ந்து கொல்கத்தா கேப்டனாக இயான் மோர்கன் நியமிக்கப்பட்டு அந்த அணி இறுதிப் போட்டியில் சென்னை அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது.
இதனால் அணியில் இருந்து தினேஷ் கார்த்திக் கழட்டி விடப்பட்டார். இதனையடுத்து நடப்பாண்டு தினேஷ் கார்த்திக் சென்னை அணிக்காக விளையாட வேண்டும் என்ற தனது விருப்பத்தை மெகா ஏலத்திற்கு முன்பாக தெரிவித்திருந்தார். தான் சென்னையை சேர்ந்தவன் என்பதால் வாய்ப்பு கிடைத்தால் அது அற்புதமாக இருக்கும் என்றும், அதேசமயம் ஏலத்தில் எந்த அணி என்னை எடுக்கிறதோ அந்த அணிக்காக சிறப்பாக விளையாடுவேன் என்றும் தினேஷ் கார்த்திக் கூறியிருந்தார்.
இதன் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் நிச்சயம் தினேஷ் கார்த்திக் சென்னை அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஐபிஎல் ஏலத்தில் பெங்களூரு அணி அவரை 5.50 கோடிக்கு எடுத்தது. இந்நிலையில் “இதில் உங்களை மிஸ் செய்துவிட்டோம். வாழ்த்துக்கள் தினேஷ் கார்த்திக்” என்று சென்னை அணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் தினேஷ் கார்த்திக் இதுவரை டெல்லி, பஞ்சாப், மும்பை, பெங்களூரு, குஜராத், கொல்கத்தா ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.