தோனியின் கனவை கலைத்த ஆர்சிபி.. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய கோலியின் படை
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
சென்னை ரசிகர்களுக்கு பேரிடியாக
ஐபிஎல் தொடரின் 68வது போட்டியில் சென்னை அணியை எதிர்த்து பெங்களூரு அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 218 ஓட்டங்களை குவித்தது.
இதனால் பெங்களூரு அணி சென்னை அணியை 200 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தினால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்று அறிவிக்கப்பட்டது. சென்னை அணி தரப்பில் ருதுராஜ் - ரச்சின் ஜோடி துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
ஆனால் சென்னை ரசிகர்களுக்கு பேரிடியாக மேக்ஸ்வெல் வீசிய முதல் பந்திலேயே ருதுராஜ் டக் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து வந்த டேரல் மிட்சல் 4 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, சென்னை அணி 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்னர் ரஹானே - ரச்சின் ரவீந்திரா கூட்டணி இணைந்தது. ரஹானே வந்ததும் அபாரமாக சிக்ஸ் அடிக்க, மறுமுனையில் ரச்சின் ரவீந்திரா நிதானமாக ஆடினார். இதனால் 6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 58 ஓட்டங்களை சேர்த்திருந்தது.
தொடர்ந்து இருவரின் அதிரடியால் சென்னை அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. சிறப்பாக ஆடிய ரஹானே 22 பந்துகளில் 33 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அடுத்து சிவம் துபே களம் புகுந்தார். சிவம் துபேவை கட்டுப்படுத்த பெங்களூரு அணி களத்தடுப்பில் பல்வேறு மாற்றங்களை செய்தது.
இதனால் சிவம் துபே ஓட்டங்களை குவிக்க முடியாமல் திணறினார். இந்த நிலையில் ஃபெர்குசன் வீசிய 12வது ஓவரில் சிக்சர் அடித்து ரச்சின் ரவீந்திரா அரைசதத்தை எட்டினார். அந்த ஓவரில் மட்டும் 19 ஓட்டங்கள் விளாசப்பட்டது.
ஆனால் அடுத்த ஓவரில் சிவம் துபே செய்த தவறால் ரச்சின் ரவீந்திரா 37 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்து ரன் அவுட்டானார். அடுத்து கேமரூன் க்ரீன் வீசிய அடுத்த ஓவரிலேயே சிக்ஸ் அடிக்க முயன்று சிவம் துபே 15 பந்துகளில் 7 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
பின்னர் வந்த சான்ட்னரும் 3 ரன்களில் வெளியேற, சென்னை அணி 15 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ஓட்டங்களை மட்டுமே சேர்த்திருந்தது. பின்னர் ஜடேஜா - தோனி கூட்டணி இணைந்தது.
தோனி(25) ஆட்டமிழந்து வெளியேறினார்
அப்போது சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற 24 பந்துகளில் 63 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் யாஷ் தயாள் வீசிய 17வது ஓவரில் 13 ஓட்டங்கள் சேர்க்கப்பட்டது. சிராஜ் வீசிய 18வது ஓவரில் 15 ஓட்டங்கள் அடிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஃபெர்குசன் வீசிய 19வது ஓவரில் ஒரு சிக்ஸ், இரு பவுண்டரி உட்பட 18 ஓட்டங்கள் விளாசப்பட்டது. கடைசி ஓவரில் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல 17 ஓட்டங்கள் தேவையாக இருந்தது.
முதல் பந்திலேயே தோனி சிக்ஸ் அடிக்க, 2வது பந்தில் தோனி(25) ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் ஷர்துல் தாக்கூர் 3வது பந்தில் ரன் சேர்க்க முடியாமல் திணற, 3 பந்துகளில் 11 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய தேவை எழுந்தது.
4வது பந்தில் ஷர்துல் தாக்கூர் ஒரு ரன் எடுக்க, கடைசி 2 பந்தில் 10 ஓட்டங்கள் தேவைப்பட்டது. சரியாக ஜடேஜா களத்திற்கு வந்தார். வீசப்பட்ட 5வது பந்தில் ஜடேஜாவின் மட்டையில் படாமல் மிஸ்ஸாகியது.
அப்போது பெங்களூரு அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட தொடங்கினர். கடைசி பந்தும் டாட் பாலாக மாறியது. இதனால் சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இதனால் பெங்களூரு அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றதோடு, பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறியுள்ளது. சென்னை அணி வெளியேறியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |