நடப்பு சேம்பியன் கொல்கத்தாவை துவம்சம் செய்த பெங்களூரு.. விராட் அதிரடி
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சேம்பியன் கொல்கத்தா அணியை பெங்களூரு அணி துவம்சம் செய்திருக்கிறது.
நரைன், ரகானே அபாரம்
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் குயின்டன் டிகாக் நான்கு ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.
இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சுனில் நரைன், ரகானே அபாரமாக விளையாடி ஓட்டங்களை சேர்த்தனர். சுனில் நரைன் வழக்கம் போல அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஐந்து பவுண்டரி, மூன்று சிக்சர் என 26 பந்துகளில் 44 ஓட்டங்கள் குவித்தார்.
மறுபக்கம் அணித்தலைவர் ரஹானே 31 பந்துகளில் 56 ஓட்டங்கள் சேர்த்தார். இதில் ஆறு பவுண்டரி, நான்கு சிக்சர் அடங்கும். இம்பேக்ட் வீரராக வந்த ஆங்கிரிஸ் ரகுவான்சி 22 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங், 12 ஓட்டங்களும், ஆண்டிரூ ரசூல் நான்கு ஓட்டங்களிலும் அடுத்தடுத்து வெளியேறினார். இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்கள் எடுத்தது.
ஆட்டம் இழக்காமல் நின்ற கோலி
பெங்களூரு அணியின் குர்னல் பாண்டியா 29 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து 175 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களம் இறங்கியது.
தொடக்க வீரராக இறங்கிய பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஜோடி அபாரமாக விளையாடினர். பில் சால்ட் 31 பந்துகளில் 56 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற, முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 95 ஓட்டங்கள் சேர்த்தது.
மறுமுனையில் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நின்ற விராட் கோலி 36 பந்துகளில் 59 ஓட்டங்கள் சேர்த்தார். படிக்கல் 10 ஓட்டங்களும், கேப்டன் ரஜத் பட்டிதார் 16 பந்துகளில் 34 ஓட்டங்களும், லிவிங்ஸ்டோன் 5 பந்துகளில் 15 ஓட்டங்களும் எடுத்து வெற்றிக்கு இட்டுச்சென்றனர்.
இதன் மூலம் பெங்களூரு அணி 16.2 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 177 ஓட்டங்கள் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |