பிளே ஆப்பை நெருங்கி வரும் பெங்களூரு! ராஜஸ்தானை தனி ஒருவனாக புரட்டி எடுத்த மேக்ஸ்வேல்: குஷியில் ரசிகர்கள்
ராஜஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.
இதில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்கள் எடுத்தது.
இதில் துவக்க வீரரான லிவிஸ் அரைசதம் அடித்து 58 ஓட்டங்களும், மற்றொரு துவக்க வீரரான ஜெய்ஸ்வால் 31 ஓட்டங்களும் அதிகபட்சமாக எடுத்தனர்.
இதையடுத்து இரண்டாவது பேட்டிங் ஆடிய பெங்களூரு அணிக்கு துவக்க வீரர்களான கோலி(25), படிக்கல்(22) ஒரு சிறப்பான துவக்கத்தை கொடுக்க, அதன் பின் வந்த மேக்ஸ்வேல் ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்க, ஒரு புறம் ஸ்ரீகர் பரத் 44 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, இறுதியாக பெங்களூரு அணி 17.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 153 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மேக்ஸ்வேல் 50 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி 11 போட்டிகளில் 7 வெற்றியுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டி ஜெயித்தாலே பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் என்பதால், ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.