ஹெட்மயர், பண்ட் போராட்டம் வீண்: டெல்லியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூர்
சிராஜின் சிறப்பாக பந்து வீச்சால் டெல்லியை ஒரு ஓட்டங்களில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.
ஐபிஎல் தொடரின் 22-வது லீக் ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது. பெங்களூர் அணிக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் நாணய சுழற்சியில் வென்று பந்து வீச்சை தெரிவு செய்தது.
இதனையடுத்து, பெங்களூர் அணி சார்பில் விராட் கோஹ்லி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். விராட் கோஹ்லி 12 ஓட்டங்களிலும், தேவ்தத் படிக்கல் 17 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
மேக்ஸ்வெல் 25 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 3-வது வீரராக களமிறங்கிய ராஜத் படிதார் 31 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் 6 ஓட்டங்களில் வெளியேறினார்.
கடைசி வரை நின்று அதிரடி காட்டிய ஏபி டி வில்லியர்ஸ் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 75 ஓட்டங்கள் விளாசி அவுட்டாகாமல் இருந்தார்.
இறுதியில், பெங்களூர் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 171 ஓட்டங்கள் எடுத்தது. டெல்லி அணி சார்பில் இஷாந்த் சர்மா, ரபடா, அவேஷ் கான், அமித் மிஷ்ரா, அக்சார் பட்டேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா 21 ஓட்டங்களும், ஷிகர் தவான் 6 ஓட்டங்களும் எடுத்து அவுட்டாகினர்.
ஸ்டீவ் ஸ்மித்(4), ஸ்டோய்னிஸ்( 22) ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அணித்தலைவர் ரிஷப் பண்ட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவருக்கு ஹெட்மயர் ஒத்துழைப்பு கொடுத்தார். கடைசி 4 ஓவரில் 56 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஹெட்மயர் கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். இதனால் 23 பந்தில் அரை சதமடித்தார்.
இறுதியில், டெல்லி அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 170 ஓட்டங்கள் எடுத்தது. ஹெட்மயர்( 53), பண்ட்(58) ஓட்டங்களும் எடுத்தனர்.
இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது பெங்களூர் அணி.
5வது வெற்றி பெற்ற பெங்களூர் அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.