தோல்வியிலும் டெல்லியை முந்தி சாதனை படைத்த RCB
ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
பஞ்சாப் வெற்றி
இதில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது.
நாணய சுழற்சிக்கு முன்னரே மழை பெய்தததால், போட்டி தாமதமாக தொடங்கப்பட்டு, 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
துடுப்பாட்டம் ஆடிய பெங்களூரு அணி, 14 ஓவர்களில், 9 விக்கெட் இழப்பிற்கு 95 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக டிம் டேவிட் 50 ஓட்டங்களும், ரஜத் படிதார் 23 ஓட்டங்களும் எடுத்தனர். மற்ற அனைவரும், ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.
96 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, 12.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பில் 98 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மோசமான சாதனை
இந்த தோல்வியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு சென்ற பெங்களூரு அணி, மற்றொரு மோசமான சாதனையை படைத்துள்ளது.
இந்த தோல்வியானது, சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு அணியின் 46வது தோல்வியாகும்.
இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் ஒரே மைதானத்தில் அதிக தோல்விகளைப் பெற்ற அணி என்ற மோசமான சாதனையை, RCB படைத்துள்ளது.
முன்னதாக, டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 45 தோல்விகளுடன் முதலிடத்தில் இருந்தது.
இந்த ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி, அதில் 3 போட்டிகளை சின்னசாமி மைதானத்தில் விளையாடி 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |