கனடாவில் பட்டப்பகலில் வீட்டு வாசல் முன் தாக்கப்பட்ட இந்தியர்: பதைபதைக்கவைக்கும் காட்சி
*கனடாவில் பிரபல ரியல் எஸ்டேட் உரிமையாளர் மற்றும் வானொலி தொகுப்பாளரான இந்தியர் ஒருவர் தாக்கப்பட்டார்.
*அவரது தாயார் வந்து தடுத்ததால் தாக்குதல்தாரிகள் தப்பி ஓட்டம்.
கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் வாழும் பிரபல ரியல் எஸ்டேட் உரிமையாளரும், பஞ்சாப் மக்களுக்கான வானொலி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்குபவருமான Joti Singh Mann என்பவர், பட்டப்பகலில் தன் வீட்டு வாசலிலேயே மர்ம நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார்.
சிசிடிவியில் பதிவாகியுள்ள காட்சிகளில், அவர் தனது ஜீப்பில் ஏறச் செல்லும்போது திடீரென எங்கிருந்தோ வரும் மர்ம நபர்கள் பட்டக்கத்திகள் மற்றும் கோடரிகளால் அவரை சரமாரியாகத் தாக்குவதைக் காணலாம்.
நீண்ட நேரமாக அவர்கள் கொலைவெறித்தாக்குதல் நடத்திய நிலையில், சத்தம் கேட்டு வீட்டிலிருந்து Joti Singhஇன் தாய் வெளியே ஓடிவந்துள்ளார். அவரைக் கண்டதும்தான் அந்த தாக்குதல்தாரிகள் அங்கிருந்து ஓடியிருக்கிறார்கள்.
அத்துடன், அந்தப் பெண்மணி கையில் கிடைத்த ஏதோ ஒரு பொருளை எடுத்துக்கொண்டு அவர்களைத் துரத்துவதையும் வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.
பயங்கரமாக தாக்கப்பட்ட Joti Singh மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் உடல் முழுவது காயங்கள் ஏற்பட்டுள்ளனவாம் அவருக்கு 25 தையல்கள் போடப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஏற்கனவே Joti Singhக்கு யாரோ கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள். அது குறித்து அவர் பொலிசில் புகாரளித்துள்ள நிலையில் அவர் தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பிராம்ப்டனில் வாழும் பஞ்சாபி சமூகத்தினரை கலக்கமடையச் செய்துள்ளது.
பொலிசார் தாக்குதல்தாரிகளைத் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையில், தன் மகனைத் தாக்கியவர்களை துணிச்சலுடன் துரத்திய Joti Singhஉடைய தாயை பிராம்ப்டன் நகர மேயர் வெகுவாக பாராட்டியுள்ளார்.