ரூ.104 லட்சம் கோடியாக உயர்ந்த நிறுவன மதிப்பு - எலான் மஸ்க்கின் திட்டம் என்ன?
எலான் மஸ்க் தனது இரு நிறுவனங்களை இணைத்ததன் மூலம், 800 பில்லியன் டொலரை எட்டிய உலகின் முதல் நபராக உருவெடுத்துள்ளார்.
எலான் மஸ்க்
உலக பணக்கார பட்டியலில் எலோன் மஸ்க் கடந்த சில ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வருகிறார். இவர், டெஸ்லா, spaceX மற்றும் X, உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், தனது விண்வெளி ஆய்வு நிறுவனமான SpaceX நிறுவனத்துடன், செயற்கை நுண்ணறிவு நிறுவனமான xAI யை அதிகாரபூர்வமாக இணைத்துள்ளார்.
இதன் மூலம், X வலைதளம், Grok Al, Grokpedia ஆகியவை SpaceX நிறுவனத்தின் கீழ் செயல்படும்.
இதன் ஒருங்கிணைப்பு மூலம் SpaceX நிறுவனத்தின் மதிப்பு 1.25 ட்ரில்லியன் டொலராகவும்(இந்திய மதிப்பில் ரூ.104 லட்சம் கோடி), எலான் மஸ்க்கின் தனிப்பட்ட சொத்துமதிப்பு 852 பில்லியன் டொலராகவும் உயர்ந்துள்ளது.
இதன் மூலம், SpaceX உலகிலேயே அதிக மதிப்புள்ள தனியார் நிறுவனம் என்ற சாதனையை படைத்துள்ளது. மேலும், 800 பில்லியன் டொலர் சொத்துமதிப்பு வைத்துள்ள ஒரே நபர் என்ற பெருமையை எலான் மஸ்க் படைத்துள்ளார்.

உலகின் இரண்டாவது பெரிய பணக்காரரான கூகிள் இணை நிறுவனர் லாரி பேஜ்ஜின் சொத்து மதிப்பு 281 பில்லியன் டொலர் ஆகும். அவரை விட எலான் மஸ்க் இப்போது 3 மடங்கு அதிக சொத்து வைத்துள்ளார்.
விண்வெளியில் தரவு மையம்
தனியாக செயல்பட்டு வந்த xAI நஷ்டத்தில் இயங்கி வந்தது. ஆனால், SpaceX கடந்த ஆண்டில் 15 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டியது.
இரு நிறுவனங்களும் விரைவில் பொதுச் சந்தையில் பங்குகளை விற்க உள்ள நிலையில், (IPO) இந்த லாப நட்ட கணக்கை ஈடுகட்டவும் இந்த நிறுவனங்களை இணைத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த இணைப்பிற்கு பின்னணியில், விண்வெளியில் டேட்டா சென்டர் உருவாக்கும் எலான் மஸ்க்கின் திட்டமும் உள்ளதாக கருதப்படுகிறது.

பூமியில் செயற்கை நுண்ணறிவுக்கான (AI) தரவு மையங்களை பராமரிக்க அதிக அளவிலான மின்சாரமும், குளிர்விப்பு வசதிகளும் தேவைப்படுகின்றன.
ஆனால் விண்வெளியில் 24 மணி நேரமும் சூரிய ஒளி கிடைப்பதால், அதன் மூலம் மின்சாரத்தை உருவாக்கி கொள்ளலாம். மேலும், அங்கு இயற்கையாகவே குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
இதனால், சுமார் 10 லட்சம் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு ஏவ அவர் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் விண்வெளியில் குப்பைகள் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |