பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் காதலியின் கண் முன்னே கடலில் மூழ்கிய புலம்பெயர்வோர்
பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில், தன் காதலியின் கண் முன்னே கடலில் மூழ்கினார் புலம்பெயர்வோர் ஒருவர்.
நேற்று முன் தினம், எரித்ரியா நாட்டைச் சேர்ந்த அந்த 27 வயது இளைஞர் உட்பட சுமார் 36 பேர் படகு ஒன்றில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்றுள்ளனர். அப்போது திடீரென அந்த படகு மூழ்கத் துவங்கியுள்ளது.
உடனே அந்த இளைஞரும், அவருடன் மேலும் நான்கு பேரும் கடலில் குதித்துள்ளனர். தன் கண் முன்னே தன் காதலன் நீரில் மூழ்குவதைக் கண்டும் உதவ முடியாத நிலையில் தவித்துள்ளார் அவரது 22 வயது காதலி.
சிறிது நேரத்தில் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்த நிலையில், அந்த பெண் படகிலிருந்த மற்றவர்களுடன் மீட்கப்பட்டு பிரான்சிலுள்ள Dunkirk துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், தண்ணீரில் மூழ்கியவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் மீட்புக்குழுவினர். தண்ணீரில் குதித்த அனைவரும் மீட்கப்பட்டுவிட்ட நிலையில், அந்த எரித்ரியா நாட்டு இளைஞருக்கு மட்டும் மாரடைப்பும் சுவாசக்கோளாறும் ஏற்பட்டுள்ளது.
Calaisஇல் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்ட அந்த இளைஞர் அங்கேயே உயிரிழந்துவிட்டார். தன் முன்னே தன் காதலன் தண்ணீரில் மூழ்குவதைக் கடைசியாக பார்த்த அவரது காதலியை, பின்னர் அவர் உயிரிழந்துவிட்டார் என்ற துயர செய்தி மட்டுமே சென்றடைந்துள்ளது.
Dunkirk அரசு வழக்கறிஞர் இந்த சம்பவம் தொடர்பாக கொலை மற்றும் உயிருக்கு அபாயத்தை ஏற்படுத்துதல் ஆகிய வழக்குகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.