கனேடிய மாகாணமொன்றில் வரலாறு காணாத எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகள் தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதி
கனேடிய மாகாணமான ஆல்பர்ட்டாவில், வரலாறு காணாத அளவில் கொரோனா நோயாளிகள் தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
ஆல்பர்ட்டா மருத்துவமனைகளில் இதுவரை இல்லாத அளவுக்கு தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த ஐந்து நாட்களில் சராசரியாக தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளொன்றிற்கு 23ஆக உள்ளது. ஆல்பர்ட்டா சுகாதார சேவைகள் அமைப்பின் முதன்மை செயல் அதிகாரியும் இயக்குநருமான Dr. Verna Yiu, தற்போது ஆல்பர்ட்டா மாகாணம் முழுவதிலுமுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 310 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 226பேர் கொரோனா பாதிப்பின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆல்பர்ட்டாவில் முந்தைய கொரோனா அலைகளின்போதும் சரி, ஆல்பர்ட்டா வரலாற்றிலும் சரி, இதுவரை தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் இத்தனை பேர் அனுமதிக்கப்பட்டதில்லை என்கிறார் அவர்.
அத்துடன், தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட சில நோயாளிகள் இறந்துபோனதகாவும், அதன் தாக்கம் தீவிரசிகிச்சைப்பிரிவு ஊழியர்களை வெகுவாக பாதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று ஒரு நாளில் மட்டுமே, ஆல்பர்ட்டாவில் 17 பேர் இறந்துபோனார்கள். 1,058 பேர் கொரோனா காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், ஆல்பர்ட்டாவில் தலைமை மருத்துவ அலுவலரான Dr. Deena Hinshaw, ஆல்பர்ட்டாவில் தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் கொரோனா காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருமே தடுப்பூசி பெறாதவர்கள்தான் என்று கூறியுள்ளார்.
ஆகவே, தயவு செய்து அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளுங்கள் என்று ஆல்பர்ட்டா மாகாண மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் அவர்.