பிரித்தானியாவில் மருத்துவமனையை நாடும் சிறார்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு
பிரித்தானியாவில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படும் சிறார்களின் தற்போதைய எண்ணிக்கை தொடர்ந்தால், இந்த குளிர்காலத்தில் இளம் உயிர்களைக் காப்பாற்ற அவர்களுக்கு அதிக படுக்கைகள் தேவைப்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கிரேட்டர் மான்செஸ்டரில் அமைந்துள்ள முக்கிய மருத்துவமனைகளில் மட்டும் காய்ச்சல் காரணமாக மே மாதத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறார்களின் எண்ணிக்கையானது இரண்டாவது மிக உயர்ந்த பதிவு என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இங்கிலாந்து முழுவதும் மருத்துவமனைகளை நாடும் சிறார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், பெரும்பாலான சிறார்கள் லேசான காய்ச்சலுடனையே மருத்துவமனைகளை நாடுவதாகவும், இது குடியிருப்பில் இருந்தே சிகிச்சை மேற்கொள்வதால் குணமடையும் என மருத்துவர்கள் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த புதன்கிழமை மட்டும் கிரேட்டர் மான்செஸ்டரில் சுமார் 200 சிறார்கள் மருத்துவமனைகளில் காத்திருந்ததாகவும், பல பெற்றோர்கள் மருத்துவர்களை சந்திக்க முடியாமல் கலக்கத்துடன் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மட்டுமின்றி தற்போதைய கொரோனா அலையும் சிறார்களின் சுகவீனத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. பொதுவாக குளிர் காலம் என்றால் காய்ச்சலுடன் 30,000 சிறார்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, அதில் மிக அரிதாக சிகிச்சை பலனின்றி 80 சிறார்கள் வரை இறக்க நேரிடும் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் கொரோனாவால் இதுவரை 4,000 சிறார்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, 20 பேர்கள் மட்டுமே இறந்துள்ளதாக மருத்துவர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.