மறக்க முடியாத திருவண்ணாமலை மண் சரிவு.., மண்ணில் புதைந்த உடல்களை மீட்ட கமாண்டர் வேதனை
திருவண்ணாமலை மாவட்டத்தில் மண்ணில் புதைந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து கமாண்டர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
திருவண்ணாமலை சம்பவம்
ஃபெங்கல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் வ.உ.சி. நகர் மலை அடிவாரத்தில் குடியிருப்பு பகுதிகள் மீது கடுமையான மண் சரிவு ஏற்பட்டது. இதனால், அங்குள்ள மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.
மேலும், இந்த நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். இந்த மண் சரிவு மீட்புப் பணியில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்பு படையின் கமாண்டர் ஸ்ரீதர் என்பவர் நடந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், "காலை 5.30 மணிக்கு மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணிகளை தொடங்கினோம். நாங்கள் முதலில் மண்சரிவு என்று தான் நினைத்தோம். ஆனால், தோண்டும்போது தான் பெரிய பாறைகள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, ஜேசிபி வைத்து மீட்புப்பணிகளை தொடங்கினோம். அப்போது, ஒரு வீட்டின் சமையலறை மற்றும் வரவேற்பு அறையையும் தோண்டினோம். அதற்குள் கவுதமன் என்பவரது உடல் இருந்தது.
அவருக்கு பக்கத்தில் இருந்த அவருடைய அம்மா மற்றும் இரண்டு பெண் குழந்தைகளின் உடல்களையும் மீட்டோம்.
அந்த வீட்டின் வாசலுக்கு முன்பாக ஒரு பெண்ணின் உடல் புதைந்திருந்தது. அவரது தலை சிக்கியிருந்ததால், உடலை நசுக்காமல் இருக்க ஒன்றரை மணிநேரம் போராடினோம்.
இதையடுத்து, வெளிப்புறம் தேடுகையில் ராஜ்குமார் என்பவரது உடல் கிடைத்தது. தெருவில் உள்ள மின்கம்பத்தின் அடியில் ஒரு பெண்ணின் உடல்கிடைத்தது. இந்த சம்பவம் என் வாழ்நாளில் மறக்க முடியாத அளவுக்கு பதிந்துவிட்டது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |