தமிழகத்தில் நாளை மறுநாள் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை- வானிலை மையம்
சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் (30 ஆம் திகதி) ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்..,
நேற்று (27.11.2024) காலை 8.30 மணி அளவில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (28.11.2024) காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது இலங்கை - திரிகோணமலையிலிருந்து கிழக்கு - வடகிழக்கே சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையில் இருந்து தென்கிழக்கே 310 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து தென்கிழக்கே 410 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு - தென்கிழக்கே 480 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி நகரக்கூடும்.
அதன் பிறகு, மேலும் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக – புதுவை கடலோரப் பகுதிகளில், காரைக்காலிற்கும் – மகாபலிபுரத்திற்கும் இடையே 30ஆம் திகதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கக்கூடும்.
அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 28ஆம் திகதி மாலை முதல் 29ஆம் திகதி காலை வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் பொழுது புயலாக வலுப்பெற்று காற்றின் வேகம் மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு உள்ளது.
அதன்படி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (29.11.2024) ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் (நவ30 ஆம் திகதி) அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதேபோல் புதுச்சேரியின் ஓரிரு இடங்களிலும் நாளை மறுநாள் (நவ.30) அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
எனவே இந்த 8 மாவட்டங்களுக்கு அன்றைய தினம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |