ஹூதிகளின் அட்டூழியம்... சுவிட்சர்லாந்தை சேர்ந்த மிகப்பெரிய சரக்கு கப்பல் நிறுவனம் எடுத்த முடிவு
உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் நிறுவனமான சுவிட்சர்லாந்தின் MSC நிறுவனம், ஹூதிகள் முன்னெடுக்கும் தாக்குதல் காரணமாக சூயஸ் கால்வாயைப் பயன்படுத்துவதை நிறுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல்
ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூதி இயக்கம் கடந்த சில வாரங்களாக செங்கடலில் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
Credit: logupdateafrica
குறித்த பாதையானது கிழக்கு-மேற்கு வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஒன்றாகவும், ஆப்ரிக்காவைச் சுற்றி வருவதற்கான கூடுதல் நேரத்தையும் செலவையும் தவிர்க்க சூயஸ் கால்வாய் ஒரு முக்கியமான பாதையாகவும் உள்ளது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்து நிறுவனத்தை சேர்ந்த லைபீரியக் கொடியுடன் கூடிய MSC பலாட்டியம் III என்ற சரக்கு கப்பல் தாக்கப்பட்டது. செங்கடலின் தெற்கு முனையில் உள்ள Bab al-Mandeb ஜலசந்தியில் ட்ரோன் விமானம் ஊடாக குறித்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய தகவலை ஹூதிகளே வெளியிட்டுள்ளனர். ஆள் அபாயம் ஏதும் இல்லை என்றாலும், தீ பற்றியெரிந்ததால் சேதம் ஏற்பட்டு, சேவையில் இருந்து நீக்கப்பட்டது. அத்துடன் Al Jasrah என்ற லைபீரியக் கொடியுடன் கூடிய சரக்கு கப்பலும் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கானது.
ஹூதிகள் சமீபத்திய வாரங்களில் கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை முடுக்கிவிட்டு இஸ்ரேலை நோக்கி ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி வருகின்றனர். ஏமனின் பெரும்பகுதியை ஆளும் ஹூதிகள், இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தும் வரை தங்கள் தாக்குதல்களை தொடர இருப்பதாகவே அறிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் MSC நிறுவனம்
ஆனால் இஸ்ரேலிய துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களை மட்டுமே தாங்கள் குறிவைத்ததாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளனர். இந்த நிலையில், செங்கடல் பகுதியில் வணிகக் கப்பலைக் குறிவைத்து தாக்குதல் நடத்தும் ட்ரோன் விமானம் ஒன்றை தங்களின் போர்க்கப்பல் ஒன்று சுட்டு வீழ்த்தியதாக பிரித்தானியா சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
Credit: logupdateafrica
இதனிடையே, சுவிட்சர்லாந்தின் MSC நிறுவனம் தெரிவிக்கையில், ஆப்பிரிக்காவின் தெற்கு முனையில் உள்ள நன்னம்பிக்கை முனையைச் சுற்றி சில சேவைகளை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக செங்கடல் பாதை ஊடாக பயணப்படுவதை தற்காலிகமாக நிறுத்துவதாக டென்மார்க் சரக்கு கப்பல் போக்குவரத்து நிறுவனமான Maersk மற்றும் ஜேர்மன் கப்பல் போக்குவரத்து நிறுவனமான Hapag-Lloyd ஆகிய அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |