பிரித்தானியர்களுக்கு சிவப்பு வானிலை எச்சரிக்கை? நாளை பயணம் செய்யவேண்டாம் என்றும் அறிவுறுத்தல்
பிரித்தானியாவை நேற்று ஒரு புயல் தாக்கிய நிலையில், மீண்டும் நாளை ஒரு புயல் தாக்க உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று பிரித்தானியாவை Dudley என்னும் புயல் தாக்கிய நிலையில், நாளை மீண்டும் Eunice என்னும் புயல் தாக்க இருப்பதாவும், அதனால் வீசும் பலத்த காற்றினால் பறக்கும் பொருட்கள் மற்றும் விழும் மரங்களால் பாதிப்பு ஏற்படும் என்றும், ஆகவே, மக்கள் பாதுகாப்பாக வீடுகளுக்குள் இருக்குமாறும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
புயல் காரணமாக, தெற்கு பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு, பறக்கும் பொருட்களால் உயிருக்கு பெரும் அபாயம் உள்ளது என்பதைக் குறிக்கும் சிவப்பு வானிலை எச்சரிக்கை விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Eunice புயல் காரணமாக மணிக்கு 100 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசலாம் என்பதால் நாளை இங்கிலாந்து முழுமைக்கும் உயிருக்கு ஆபத்து என்னும் ஆம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆராய்ச்சி மையம்.
நேற்று மாலை 5.00 மணியளவில், வேல்ஸின் சில பகுதிகளில் மணிக்கு 71 மைல் முதல் மணிக்கு 81 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசியது. ஸ்காட்லாந்திலுள்ள ஒரு இடத்தில், மணிக்கு 101 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசியதாக பதிவாகியுள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 1,700 வீடுகள் இருளில் மூழ்கின.
பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததாலும், பொருட்கள் காற்றில் பறந்ததாலும் ரயில் சேவையும், படகுப்போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன.
மான்செஸ்டர் நோக்கிப் பறந்த விமானம் ஒன்று, பலத்த காற்று காரணமாக அங்கு தரையிறங்க முடியாமல், வெகு நேரம் அங்கேயே சுற்றிக்கொண்டிருந்துவிட்டு, பிறகு லிவர்பூல் விமான நிலையத்துக்குச் சென்று அங்கு தரையிறங்க நேர்ந்தது.
இந்நிலையில், நாளை Eunice புயல் தாக்க உள்ள நிலையில், ரயில் மற்றும் படகுப்போக்குவரத்து பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லண்டன் வட கிழக்கு ரயில்வே, தனது பயணிகளிடம், தயவு செய்து பிப்ரவரி 18, வெள்ளிக்கிழமையன்று பயணம் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
ஏற்கனவே நேற்று தாக்கிய புயலின் தாக்கத்திலிருந்து மக்கள் விடுபட முயற்சித்துக்கொண்டிருக்கும் நிலையில், நாளை மீண்டும் புயல் தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் கவலையடைந்துள்ளார்கள்.