அகதி விசா... பிரித்தானிய தொண்டு நிறுவனம் முன்வைத்துள்ள திட்டம்
சிறுபடகுகள் உதவியுடன், சட்டவிரோதமாக ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவோரைக் கட்டுப்படுத்துவதற்காக பிரித்தானிய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
புதிய புலம்பெயர்தல் சட்டம்
அதற்காக, ‘சட்டவிரோத புலம்பெயர்தல் சட்டம்’ என்னும் ஒரு புதிய சட்டத்தையும் உருவாக்கியுள்ளது. ஆனால், அந்த சட்டம் பயன்படாது என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
விமர்சகர்கள் விமர்சனங்கள் மட்டுமே முன்வைப்பதாகவும், மாற்று யோசனை எதையும் முன்வைப்பதில்லை என்றும் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
ஆகவே, பிரித்தானிய தொண்டு நிறுவனம் ஒன்று, சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது.
Photograph: Gareth Fuller/PA
அகதிகளுக்கென தனியாக ஒரு விசா
பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கும் தொண்டு நிறுவனமான The Refugee Council, சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது. அந்த திட்டத்தில் நான்கு விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
1. அகதிகளுக்கென தனியாக ‘அகதி விசா’ என ஒரு விசாவை உருவாக்கவேண்டும். அது, வெளிநாட்டவர்கள் ஒன்லைனிலோ அல்லது விசா விண்ணப்ப மையம் ஒன்றிலோ விண்ணப்பித்து சட்டப்படி பிரித்தானியாவுக்கு பயணித்து, புகலிடம் கோர அனுமதிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கவேண்டும்.
2. அதிகமாக அகதிகளாக செல்லக்கூடிய நாட்வர்களான ஆப்கானிஸ்தான், எரித்ரியா, ஈரான், சிரியா மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10,000 பேர் அவ்வகையில் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படவேண்டும்.
3. விண்ணப்பித்த அனைவருக்கும் அடிப்படை அடையாள மற்றும் பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சோதனைகளில் வெற்றி பெறுவோர் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படவேண்டும்.
4. அவர்கள் பிரித்தானியாவுக்கு வந்ததும், இப்போதிருப்பதைப் போலில்லாது, வேகமாக அவர்களுடைய புகலிடக் கோரிக்கை பரிசீலிக்கப்படவேண்டும். இப்படி சட்டப்படி அகதிகளை அனுமதிப்பதால், சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசுக்கு ஆகும் செலவு மற்றும் உயிரிழப்புக்கள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதோடு, மனிதக் கடத்தல்காரர்களையும் அது கட்டுப்படுத்தும் என்கிறது அந்த தொண்டு நிறுவனம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |