புலம்பெயர்ந்தோர் தடுப்புக்காவல் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவுக்கு வரவேற்பு
கனேடிய மாகாணம் ஒன்று, புலம்பெயர்ந்தோரை தடுப்புக்காவலில் வைப்பது தொடர்பில் எடுத்துள்ள முடிவை மனித உரிமைகள் அமைப்புகள் வரவேற்றுள்ளன.
12 ஆண்டுகளுக்கு முன்பு கனடாவில் அகதி நிலை கோரிய Sara Lopez, மூன்று மாதங்கள் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயிலுள்ள சிறை ஒன்றில் அடைக்கப்பட்டார்.
அப்போது சட்ட ஆலோசனை பெறவோ, தன் குடும்பத்தை சந்திக்கவோ தனக்கு அனுமதியளிக்கப்படவில்லை என்று கூறும் Sara, குளிக்கவும் கழிவறைக்குச் செல்லவும் மட்டுமே தனக்கு சுதந்திரம் இருந்ததாக தெரிவிக்கிறார்.
அதன் பின், புலம்பெயர்தல் தடுப்புக்காவலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டத்தில் முன்னணியில் நின்றார் Sara. Saraவுக்கும் அவரோடு இணைந்து போராடிய மனித உரிமை அமைப்புகளுக்கும் இப்போது வெற்றி கிடைத்துள்ளது எனலாம்.
We are thrilled that #BC has taken a historic step today by cancelling its immigration detention contract with #CBSA!!!
— Samer Muscati (@SamerMuscati) July 21, 2022
Other provinces should follow suit & help #Canada get on the path to abolishing immigration detention. https://t.co/A4aIwezjd9 #WelcomeToCanada #bcpoli pic.twitter.com/9uiePkbdT2
ஆம், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், தனது மாகாண காவல் மையங்களில் புலம்பெயர்வோரை அடைத்துவைக்கும் கனடா எல்லை பாதுகாப்பு ஏஜன்சியின் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.
அப்படி புலம்பெயர்ந்தோரை காவல் மையங்களில் அடைத்துவைப்பது மனித உரிமைகளுக்கு எதிரானது என்று கூறி, இனி அவ்வாறு செய்வதில்லை என முடிவு செய்துள்ளது அம்மாகாணம்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் இந்த முடிவு, மனித உரிமைகள் மற்றும் புலம்பெயர்தல் விடயங்களைக் கையாள்பவர்களுக்கும் கிடைத்துள்ள வெற்றி என்கிறார் Sara.
புலம்பெயர்ந்தோரை காவலில் அடைக்கும் முறைமைக்கு முடிவுகொண்டுவரவேண்டும் என அழைப்பு விடுத்தவரான பிரிட்டிஷ் கொலம்பியாவின் மனித உரிமைகள் ஆணையரான Kasari Govender, அந்த முறைமை மனித உரிமைகளை மீறும் செயலாகும் என்றும், தற்போது அதை முடிவுக்குக் கொண்டுவர பிரிட்டிஷ் கொலம்பியா எடுத்துள்ள நடவடிக்கை பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என தான் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.