அவுஸ்திரேலியாவால் சிறைவைக்கப்பட்டுள்ள 150 அகதிகளுக்கு கனடாவிலிருந்து ஒரு மகிழ்ச்சியான செய்தி
அவுஸ்திரேலியாவின் பரிசீலனை மையங்களில் சிறைவைக்கப்பட்டிருக்கும் சுமார் 150 அகதிகள், கனடாவில் தங்கள் புது வாழ்க்கையைத் துவங்க இருக்கிறார்கள். வான்கூவரில் அமைந்துள்ள MOSAIC என்னும் லாப நோக்கல்லாத புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் குடியமர்த்தும் தொண்டு நிறுவனம் ஒன்று, அதற்கான இறுதி கட்ட முயற்சிகளில் இறங்கியுள்ளது.
சுமார் ஏழு ஆண்டுகளாக சிறைக்கைதிகள் போல் வாழ்ந்துவரும் அந்த அகதிகளில் சிலர் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், மியான்மர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், சிலரோ நாடற்ற நிலைமையில் வாழ்பவர்கள்.
அவுஸ்திரேலியாவைப் பொருத்தவரை, படகு மூலம் பயணித்து அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோரை வெவ்வேறு தீவுகளிலுள்ள பரிசீலனை மையங்களுக்கு அனுப்புவதைக் கொள்கையாகக் கொண்டுள்ளது.
அவர்கள் எக்காரணம் கொண்டும் அவுஸ்திரேலியாவில் குடியமர அனுமதிக்கப்படமாட்டார்கள். அப்படி சொந்த நாட்டையும் உறவுகளையும் விட்டு வந்து பரிசீலனை மையங்களில் சிறைக்கைதிகள் போல் வாழும் அகதிகள் பலர் தற்கொலைக்கு முயல்வதுண்டு.
அப்படிப்பட்ட ஒரு சூழலில்தான், கனடாவிலுள்ள அகதிகளுக்கு உதவும் அமைப்பைச் சேர்ந்த சிலர் எடுத்த முயற்சியின் பேரில், MOSAIC என்னும் அகதிகளுக்கு உதவும் தொண்டு நிறுவனம் ஒன்று, அவுஸ்திரேலியாவால் சிறைவைக்கப்பட்டுள்ள அகதிகளை மீட்டு கனடாவில் குடியமர வைப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.
அந்த அகதிகள் கனடாவில் கால்வைத்ததும், MOSAIC நிறுவனம் அவர்கள் கனடாவில் குடியமர்வதற்கான உதவிகளை செய்து, அவர்களுக்கு வீடு முதல் வேலை வரையிலான அனைத்து உதவிகளையும் செய்து தர உள்ளது.
அத்துடன், அந்த அகதிகள் தங்கள் தாய்நாட்டில் விட்டுவந்த தங்கள்
குடும்பத்தினரையும் தொடர்பு கொள்ள உதவ இருப்பதாகவும் தெரிவிக்கிறார் MOSAIC
அமைப்பின் மூத்த மேலாளரான Saleem Spindar.