ரேசர் கம்பி தடுப்பு வேலி... அகதிகள், புகலிடம் கோருவோர் மீது பிரித்தானியாவின் கோர முகம்
ஐரோப்பாவில் இருந்து அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோரை அப்புறப்படுத்த பிரித்தானியா உதவியுடன் கட்டமைக்கப்படும் ஆபத்தான ரேசர் கம்பி தடுப்பு வேலியால் பலர் படுகாயமடைந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
5.5 மீற்றர் உயரம் கொண்ட தடுப்பு வேலி
போலந்து எல்லையில் பிரித்தானிய ராணுவத்தின் உதவியுடன் கட்டமைக்கப்பட்டுள்ள 5.5 மீற்றர் உயரம் கொண்ட தடுப்பு வேலிகளை தாண்டி சமீபத்தில் ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்றவர்களில் குறைந்தது 16 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், மனித உரிமைகளுக்காக போராடும் குழுக்கள், மனிதாபிமானமற்ற குடியேற்ற எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் ஏன் உதவியது என்பது குறித்து விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
மேலும், அப்பாவி மக்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளில் பிரித்தானியாவின் பங்கு தொடர்பில் அமைச்சர்கள் விளக்கமளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளது.
ஆனால் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், 2021 டிசம்பர் மற்றும் 2022 ஆகஸ்டு மாத காலகட்டத்தில் பிரித்தானிய ராணுவத்தின் சிறப்பு பிரிவு போலந்துக்கு சென்றுள்ளதை உறுதி செய்துள்ளதுடன், எல்லையில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியில் உதவியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
@reuters
போலந்து பாதுகாப்பு அமைச்சரும் இது தொடர்பில் உறுதி செய்துள்ளதுடன், பெலாரஸ் எல்லையில் பிரித்தானிய ராணுவத்தினர் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மோசமான காயங்களுடன் தப்பிய பலர்
இந்த நிலையில், தொடர்புடைய ஆபத்தான வேலியால் பலர் மோசமான காயங்களுடன் தப்பியுள்ளதாக மருத்துவ உதவி தொண்டு நிறுவனமான MSF அம்பலப்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 24ம் திகதி வரையான தரவுகளில், குறைந்தது 16 பேர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும், குறிப்பாக சிரியா, ஈராக் குர்திஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதி மக்கள் என அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய ஆபத்தான வேலியானது 116 மைல்கள் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பிரித்தானிய அரசாங்கம் இவ்வாறான மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு உதவுகிறது என்பது பயப்படுத்துவதாக உள்ளது எனவும் MSF கவலை தெரிவித்துள்ளது.
@getty
மேலும், இதுபோன்று எல்லைகளில் அமைக்கப்பட்ட ஆபத்தான வேலிகள், அல்லது எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள பொலிசார், ராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான புகலிடம் கோரும் மக்கள் 498 பேர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளதாக MSF தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, ஹங்கேரியில் புகலிடம் கோரும் குழந்தைகளை கப்பல் கொள்கலன்களில் அடைத்து வைத்து கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது பற்றிய சமீபத்திய அறிக்கைகள் தொடர்பில் விசாரித்து வருவதாகவும் MSF தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.