கட்டாய இராணுவ சேவையை மறுத்தால் என்னவாகும்? பிரித்தானிய அமைச்சர் விளக்கம்
பிரித்தானியாவில் மீண்டும் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி அமைந்தால் கட்டாய இராணுவ சேவை அமுலுக்கு கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், உள்விவகார அமைச்சர் முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
கட்டாய தேசிய சேவை
கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி அமைந்தால் கட்டாய இராணுவ சேவை கொண்டுவரப்படும் என பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். ஆனால் இராணுவ சேவைக்கு மறுப்பு தெரிவிக்கும் எவரும் சிறைக்கு அனுப்ப வாய்ப்பில்லை என்றே உள்விவகார செயலர் James Cleverly தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 18 வயது கடந்த அனைவருக்கும் கட்டாய இராணுவ சேவை என்பதை கொள்கை முடிவாக பிரதமர் ரிஷி சுனக் அறிவித்திருந்தார்.
இந்த திட்டத்தில் இணைவோருக்கு 12 மாத முழு நேர இராணுவ பணி அல்லது மாதத்தில் ஒரு வார இறுதி நாளில் பணியாற்றும் அனுமதி என தெரிவு செய்யும் வாய்ப்புகளும் அளிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கட்டாய தேசிய சேவையை அமுலுக்கு கொண்டுவரும் திட்டம் அரசாங்கத்திற்கு இல்லை என பாதுகாப்பு அமைச்சர் Dr Andrew Murrison தெரிவித்திருந்த இரண்டே நாளில், இந்த அறிவிப்பு வெளியானது.
சிறைக்கு செல்ல வாய்ப்பில்லை
இந்த நிலையிலேயே, இந்த திட்டத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் இளைஞர்களின் நிலை என்ன என்பது போன்ற கேள்விகள் பரவலாக எழுந்தன. மட்டுமின்றி, அப்படியான இளைஞர்கள் தண்டிக்கப்படுவார்களா என்ற கேள்வியும் எழுந்தது.
இதனையடுத்தே உள்விவகார செயலர் James Cleverly உரிய விளக்கமளித்துள்ளார். இந்த திட்டத்தில் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு வாய்ப்பில்லை என்றும், சேவையை மறுப்பவர்கள் ஒருபோதும் சிறைக்கு செல்ல வாய்ப்பில்லை என்றார்.
மட்டுமின்றி, இந்த இராணுவ சேவையானது கட்டாயமல்ல என்றும், ஆனால் இராணுவ சேவையில் இணையும் இளைஞர்களுக்கு ஊதியமளிக்கப்படும் என்றும், தன்னார்வத் தொண்டு செய்பவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என்றும் விளக்கமளித்துள்ளார்.
மேலும், இராணுவ சேவையில் இணைவோருக்கு இராணுவத்தில் பணியாற்றும் வாய்ப்புகள் அளிக்கப்படும், அதுவும் கட்டாயமல்ல என்றார். கட்டாய தேசிய சேவையை அமுலுக்கு கொண்டுவருவதால் ஆண்டுக்கு 2.5 பில்லியன் பவுண்டுகள் செலவாகும் என்றும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |