தேனிலவின்போது கொல்லப்பட்ட கர்ப்பிணிப்பெண்: குடும்பத்தினர் விடுத்துள்ள கோரிக்கை
பிரித்தானியாவில் தேனிலவின்போது கொல்லப்பட்ட கர்ப்பிணிப்பெண் ஒருவரின் குடும்பத்தினர், அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்கள்.
தேனிலவின்போது கொல்லப்பட்ட கர்ப்பிணி
2021ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி, தன் கணவரான அன்வருடன் (Kashif Anwar, 29) தேனிலவுக்காக ஸ்காட்லாந்திலுள்ள Arthur's Seat என்ற மலைக்கு சென்றிருந்த ஃபவ்ஸியா (Fawziyah Javed, 31) என்னும் பெண், மலையுச்சியிலிருந்து விழுந்ததில் உயிரிழந்ததுடன், அவரது கர்ப்பத்திலிருந்த ஆண் குழந்தையும் இறந்துவிட்டது.
மலையுச்சியிலிருந்து விழுந்த ஃபவ்ஸியா உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த ஒருவரிடம், ’என் கணவரை என் அருகே வரவிடாதீர்கள், அவர் என்னை மலையுச்சியிலிருந்து தள்ளிவிட்டார்’ என்று கூறியுள்ளார்.
UGC
ஃபவ்ஸியா ஒரு சட்டத்தரணி ஆவார். திருமணமானதுமே கணவன் மனைவிக்குள் பிரச்சினை உருவானதைத் தொடர்ந்து, தனது கணவரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என எண்ணிய அவர், கணவனுக்கெதிரான ஆதாரங்களைத் திரட்டத் துவங்கியுள்ளார்.
கணவர் தன்னை மிரட்டுவதை மொபைலில் பலமுறை பதிவு செய்ததுடன், இரண்டுமுறை பொலிஸ் நிலையம் சென்று, தன் கணவர் தன்னை மிரட்டுவது குறித்து புகாரும் பதிவு செய்துள்ளார். இறுதியில், ஃபவ்ஸியா தன் மரணத்துக்கு முன் திரட்டி வைத்த ஆதாரங்களே, அன்வர் குற்றவாளி என முடிவு செய்ய முக்கிய ஆதாரங்களாக உதவி அவரை சிறைக்கு அனுப்பிவைத்தன.
குடும்பத்தினர் விடுத்துள்ள கோரிக்கை
ஃபவ்ஸியாவின் மரணத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அவரது குடும்பத்தினர், இப்படி குடும்ப உறுப்பினர்களால் அல்லது கணவனால் கொல்லப்படும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் Killed Women campaign என்னும் அமைப்புடன் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர்.
பிரித்தானியாவைப் பொறுத்தவரை, ஒரு வாரத்துக்கு இரண்டு பெண்கள், தங்கள் கணவர் அல்லது முன்னாள் கணவரால் கொல்லப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
குற்றவியல் துறை நிபுணரான Jane Monkton Smith என்பவர் மேற்கொண்ட விசாரணை ஒன்றில், 2009இலிருந்து 2021வரை, 51 பெண்கள் ஃபவ்ஸியாவைப்போலவே உயரமான இடங்களிலிருந்து விழுந்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்துக்களில் 27 சந்தேகத்துக்கிடமானவை என கருதப்படும் நிலையில், இந்த சம்பவங்கள் தொடர்பாக 21 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஆறு பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, ஐந்து பேர் குற்றவாளிகள் என நிரூபணமாகியுள்ளது.
PA
17 பேர் உயரமான இடங்களிலிருந்து விழுந்து உயிரிழந்த நிலையில், இந்த சம்பவங்களில் இரண்டு பேர் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்ததாகவும், ஒருவர் கொலை செய்ததாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஃபவ்ஸியாவின் தாயாகிய Yasmin Javed, உயரமான இடங்களிலிருந்து விழுந்த பெண்கள் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டாலன்றி, அவர்கள் கொல்லப்பட்ட காரணமாக இருந்தவர்கள் கொலைக்குற்றச்சாட்டிலிருந்து தப்பிவிடக்கூடும்.
அந்தப் பெண்கள் அனைவருக்கும் நீதி கிடைக்கும் வகையில், அப்படி சந்தேகத்துக்குரிய வகையில் உயரமான இடங்களிலிருந்து விழுந்து உயிரிழந்த பெண்களின் வழக்குகள் அனைத்தும் மீளாய்வு செய்யப்படவேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |