ஆண்கள் சீருடையை அணிந்து அவதியுற்று வந்த சுவிஸ் இராணுவ வீராங்கனைகளுக்கு விடிவு!
என்னதான் ஆண்களும் பெண்களும் சமமாக வேலை செய்தாலும், உடல்வாகைப் பொருத்தவரை இயற்கை அவர்களை வெவ்வேறு விதமாக அல்லவா படைத்திருக்கிறது.
அப்படியிருக்கும் பட்சத்தில், ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரேவிதமான உடை எப்படி பொருத்தமாக இருக்கும்.
இத்தனை ஆண்டுகளுக்குப்பின், இந்த கேள்வி இப்போதுதான் சுவிஸ் இராணுவ அதிகாரிகள் மனதில் எழுந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் ஆண்களுக்கு இராணுவப்பணி கட்டாயம் என்றாலும், பெண்களுக்கு அப்படியில்லை. அவர்கள் விருப்பப்பட்டால் இராணுவத்தில் சேரலாம்
ஆகவே, சுவிஸ் இராணுவத்தில் பணியாற்றுவோரில், வெறும் 0.9 சதவிகிதத்தினர்தான் பெண்கள். அப்படியிருக்கும்போது அவர்களுக்கென்று தனியாக சீருடைகள் எதற்கு என்று நினைத்தார்களோ என்னவோ, தனியாக பெண்களுக்கென்று சீருடைகள் இதுவரை இல்லை. ஆண்கள் என்ன உடைகளை அணிந்தார்களோ, அதைத்தான் பெண்களும் அணிந்துவந்துள்ளார்கள்.
இந்நிலையில், சுவிஸ் வரலாற்றில் முதன்முறையாக Viola Amherd என்ற பெண் பாதுகாப்புப்படை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதன்பின், இராணுவத்தில் பெண்கள் இணைய ஊக்குவிக்கும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அவற்றில் ஒரு நடவடிக்கையாக, பெண்களின் உடல் வாகுக்கேற்ற விதத்தில், அவர்களுக்கு அணிவதற்கு வசதியான சீருடைகள் விரைவில் வழங்கப்பட உள்ளன.