சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் காணாமல் போன நபரின் உடல்: 52 ஆண்டுகளுக்குப்பின் அடையாளம் தெரியவந்தது
சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் மாயமான ஒருவருடைய உடல், 52 ஆண்டுகளுக்குப் பின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாக சுவிஸ் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
52 ஆண்டுகளுக்கு முன் மாயமான நபர்
2022ஆம் ஆண்டு, ஆகத்து மாதம், மலையேற்றத்துக்குச் சென்ற இருவர், Chessjengletscher என்னும் பனிப்பாறையில் மனித உடலின் எச்சங்களைக் கண்டுள்ளார்கள். அந்த உடலை அடையாளம் காண ஓராண்டு ஆன நிலையில், சென்ற மாதம், அதாவது, ஆகத்து மாதம் 30ஆம் திகதி அந்த உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது.
1971இல் காணாமல் போன நபர்
1971ஆம் ஆண்டு, ஜூலை மாதம், சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் மலையேற்றத்துக்குச் சென்ற பிரித்தானியர் ஒருவர் மாயமாகியுள்ளார். அப்போது அவரைத் தேடும் முயற்சி பலனளிக்கவில்லை.இந்நிலையில், 2022ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் ஆல்ப்ஸ் மலையில் கண்டுபிடிக்கப்பட்ட உடல், 52 ஆண்டுகளுக்கு முன் மாயமான அந்த பிரித்தானியருடையது என தற்போது தெரியவந்துள்ளது.
இண்டர்போல் மற்றும் ஸ்கொட்லாந்து பொலிசார் உதவியுடன், மாயமான அந்த பிரித்தானியரின் உறவினர்களின் DNA பெறப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த கண்டுபிடிப்பு சாத்தியமானது.
புவி வெப்பமயமாதல் காரணமாக, ஆல்ப்ஸ் மலையில் பனிப்பாறைகள் உருகி வருவதால், எப்போதோ மாயமான மலையேற்ற வீரர்களின் உடல்கள் இப்போது கிடைத்துவருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |