சிஎஸ்கே ஜெர்சியில் இருந்து அதை நீக்குங்கள்... கோரிக்கை வைத்த மொயின் அலி
தன்னுடைய சிஎஸ்கே ஜெர்சியில் இருக்கும் மதுபான நிறுவன விளம்பர சின்னத்தை நீக்க வேண்டும் என மொயின் அலி விடுத்த கோரிக்கையை அணி நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது ஐபிஎல் 2021 தொடர் ஆரம்பமாக இன்னும் சில நாட்களில் ஆரம்பமாக உள்ளது.
இந்த முறை எட்டு ஐபிஎல் அணிகளும் அவர்களது ஹோம் கிரவுண்டில் விளையாடாமல் மற்ற மைதானங்களில் விளையாடுகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய ஆட்டங்களை மும்பையில் விளையாடுகிறது. அதற்காக இப்போது சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் மும்பையில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இங்கிலாந்து சகலதுறை வீரரான மொயின் அலியை ரூ. 7 கோடிக்கு ஏலம் எடுத்தது. இந்த நிலையில் சிஎஸ்கே ஜெர்சியில் மதுபான நிறுவனத்தின் விளம்பரச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதை கவனித்த அவர், அதற்கு தமது ஆட்சேபத்தை தெரிவித்துள்ளார்.
மொயின் அலி இஸ்லாமியர் என்பதால் மது தொடர்பான எந்த விளம்பரமும் தன்னுடைய ஜெர்சியில் இடம் பெற வேண்டாம் என்றும் அப்படி இடம்பெற்றுள்ள மதுபான விளம்பர சின்னத்தை நீக்கிவிடும்படியாக சிஎஸ்கே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார்.
இதனை ஒப்புக்கொண்டு மொயின் அலியின் உணர்வுக்கு மதிப்பளித்து ஜெர்சியில் இருந்து நீக்கவும் முடிவு செய்துள்ளது சிஎஸ்கே நிர்வாகம்.