பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார்
இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்திட்ட பிரபல விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் இன்று காலை காலமானார்.
விஞ்ஞானி மரணம்
பசுமைப் புரட்சியின் தந்தை என அறியப்பட்ட பிரபல விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் சென்னையில் இன்று காலை காலமானார். இவருக்கு வயது 98.
சென்னையில் இன்று காலை 11.20 மணியளவில் வயது மூப்பு காரணமாக எம்.எஸ்.சுவாமிநாதன் காலமானார். இவரது மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
யார் இவர்?
இவர் தமிழகதில் உள்ள கும்பகோணத்தில் சாம்பசிவன் மற்றும் பார்வதி தங்கம்மாள் தம்பதிக்கு 1925 -ம் ஆண்டு பிறந்தார்.
சிறுவயதில் தந்தையை இழந்த இவர், உறவினரான எம்.கே.நாராயணசாமியால் வளர்க்கப்பட்டார். பின்பு, திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் சேர்ந்து பி.எஸ்சி விலங்கியலில் பட்டம் பெற்றார்.
இதனைத்தொடர்ந்து, 1943 ஆம் ஆண்டு வங்கத்தில் பஞ்சம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததையறிந்து அதிர்ச்சியடைந்த இவர், உணவு உற்பத்தி தொடர்பான ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார்.
இதன்பின், கோவை வேளாண் கல்லூரியில் இளநிலை பட்டமும், டெல்லியில் மரபணு பயிர்கள் குறித்த முதுநிலை பட்டமும் பெற்றார்.
அப்போது, தேர்வெழுதி ஐபிஎஸ் பணிக்குத் தேர்வானார். ஆனால், விவசாயத்தின் மீதுள்ள அன்பால் ஐபிஎஸ் பணிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் செல்லவில்லை.
விருதுகள் குவித்த எம்.எஸ்.சுவாமிநாதன்
மேலும் இவர், அரசுக்கு பல்வேறு திட்டங்களை வகுத்து கொடுத்துள்ளார். அதன்மூலம், இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி, தேவையை விட பல மடங்கு அதிகமானது.
இதன் பின்னர், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டார்.
அதுமட்டுமல்லாமல், மத்திய அரசின் பத்மஸ்ரீ (1967), பத்மபூஷண் (1972), பத்மவிபூஷண் (1989) உள்ளிட்ட ஏராளமான விருதுகளை வாங்கியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |