காயம் காரணமாக தீபக் சாஹர் விலகல் - சென்னை அணியில் இடம் பெற வாய்ப்புள்ள 5 வீரர்கள்
ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக சென்னை அணியில் தீபக் சாஹர் பங்கேற்பது சந்தேகம் என்பதால் அவருக்கு பதில் யார் அணிக்குள் வருவார்கள் என்பதை கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
நடப்பாண்டு ஐ.பி.எல். தொடரின் கிரிக்கெட் போட்டிகள் வரும் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் கடந்த பிப்ரவரி மாதம் 12,13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் எப்போதும் அனுபவம் வாய்ந்த வீரர்களை எடுக்கும் சென்னை அணி ஏற்கனவே தங்கள் அணியில் விளையாடி வந்த தீபக் சாஹரை ரூ.14 கோடிக்கு ஏலம் எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஆனால் துரதிஷ்டவசமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடிய தீபக் சாஹர் காயம் அடைந்ததால் அதனைத் தொடர்ந்து நடந்த இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இடம் பெறவில்லை. மேலும் ஐபிஎல் தொடரிலும் தீபக் சாஹர் பங்கேற்பது சந்தேகம் என்பதால் அவருக்கு பதிலாக அணியில் இடம் பெற 5 வீரர்களுக்கு வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
அதன்படி இஷாந்த் சர்மா, மும்பை, ராஜஸ்தான்,குஜராத் லயன்ஸ் போன்ற அணிகளில் விளையாடிய தவால் குல்கர்னி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த அர்சான், இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்ற சந்திப் வாரியர், 19 வயதிற்குட்பட்ட உலகக்கோப்பை தொடரில் மிக சிறப்பாக ஆடிய ஆகாஷ் சிங் ஆகிய 5 பேரும் தான் இந்த பட்டியலில் உள்ளனர்.