பிரித்தானியாவில் சடலமாகக் கண்டெடுக்கப்பட குழந்தை வழக்கு: அதிகாரிகளின் கவனக்குறைவு
பிரித்தானியாவில் பாகிஸ்தான் வம்சாவளியினரான சிறுமி ஒருத்தி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், அவளது தந்தை, சித்தி மற்றும் தந்தையின் தம்பி ஆகியோர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், சிறார் சேவை அதிகாரிகள் அந்தக் குழந்தை விடயத்தில் கவனமாக இருந்திருந்தால், பிள்ளை காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்றும், ஆனால், அதிகாரிகள் தொடர்ந்து பலமுறை வாய்ப்புகளைத் தவறவிட்டுள்ளார்கள் என்பதும் தற்போது மீளாய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட குழந்தை
ஆகத்து மாதம் 10ஆம் திகதி, இங்கிலாந்திலுள்ள Woking என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாள் சாரா (Sara Sharif, 10), என்னும் சிறுமி.

சாராவின் உடல் கண்டெடுக்கப்படுவதற்கு முந்தைய தினம், சாராவின் தந்தையான ஷெரீஃப் (Urfan Sharif, 41) அவரது இரண்டாவது மனைவியான பட்டூல் (Beinash Batool, 29) மற்றும் ஷெரீஃபின் சகோதரரான மாலிக் (Faisal Shahzad Malik, 28) ஆகியோர், ஷெரீஃபின் ஐந்து பிள்ளைகளுடன் பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்றுவிட்டார்கள்.
அவர்களை பிரித்தானியா மற்றும் பாகிஸ்தான் பொலிசார் தேடி வந்த நிலையில், அவர்கள் பின்னர் பிரித்தானியா திரும்பினார்கள்.

அவர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு தற்போது சிறையிலடைக்கப்பட்டுள்ளார்கள்.
மீளாய்வு முடிவுகள்
இந்நிலையில், சிறார் நல அமைப்பொன்று சாரா மரணம் தொடர்பில் மீளாய்வு நடத்தியது. மீளாய்வில், சாராவை பாதுகாக்கவேண்டிய சிறார் சேவை அமைப்பு பல தவறுகளை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
குழந்தை கொல்லப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன், அவள் நலமாக இருக்கிறாளா என்பதை உறுதிசெய்யவேண்டிய அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள், சாராவைத் தேடிச் சென்றுள்ளார்கள்.
ஆனால், அவர்கள் தவறான முகவரிக்குச் சென்றுள்ளார்கள். மீண்டும் அடுத்த நாள் குழந்தையைச் சென்று பார்க்கவேண்டிய அவர்கள் அதற்குப் பின் பிள்ளையைப் பார்க்கவேயில்லை, அவள் கொல்லப்பட்டுவிட்டாள்.
சாராவின் தந்தையான ஷெரீஃப், வீட்டிலுள்ளவர்களைத் தாக்கும் வழக்கம் கொண்டவர் என்று தெரிந்தும் அவரிடம் சாரா வளர அனுமதிக்கப்பட்டுள்ளாள்.

சாரா பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளாள். ஆனாலும், அது தொடர்பில் அதிகாரிகள் சரியான ஆய்வு செய்யவில்லை.
சாரா உடலில் காயங்கள் காணப்பட்டுள்ளன. ஆசிரியை அது குறித்து கேள்வி எழுப்பிய மறுநாள் அவள் பள்ளிக்கு ஹிஜாப் அணிந்துவந்துள்ளாள். அது தன் காயங்களை மறைக்க என்பதை அதிகாரிகள் கவனிக்கத் தவறிவிட்டார்கள்.
பிள்ளையில் உடம்பில் இரும்புக் கம்பியால் சூடு வைக்கப்பட்ட நிலையிலும், அது அவளது பெற்றோரால் பொய்யாக மறுக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படியே பலமுறை குழந்தை துன்புறுத்தப்படுகிறாள் என்பதைக் கண்டுபிடிக்க வாய்ப்புகள் கிடைத்தும் அதிகாரிகள் கவனக்குறைவாகவே இருந்துள்ளார்கள்.
பிள்ளை அடித்துக் கொல்லப்பட்டுவிட்டாள். அவளது உடலில் 71 சமீபத்திய காயங்கள் இருந்தன. உண்மையில், பல ஆண்டுகளாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறாள் சாரா.
ஆனால், குழந்தைகள் சேவை அதிகாரிகள் அவள் துன்புறுத்தப்படுவதைக் கண்டுபிடிக்கவேயில்லை.
அவளைக் கொலை செய்தது அவளது பெற்றோர்தான் என்பதை மறுக்கமுடியாது.
என்றாலும், அதை குழந்தைகள் சேவை அதிகாரிகள் தடுத்திருக்கமுடியும், ஆனால், அவர்கள் அதைத் தடுக்கத் தவறிவிட்டார்கள் என சிறார் நல அமைப்பொன்று நடத்திய மீளாய்வில் தெரியவந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |