வெள்ளத்தால் நிலைகுலைந்த ஜேர்மனியில் பெண் செய்தியாளர் செய்த மோசமான செயல்... கமெராவில் சிக்கிய காட்சி
ஜேர்மனியில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தயாரிப்பதற்காக சென்ற செய்தியாளர் ஒருவர் செய்த மோசமான செயல் கமெராவில் சிக்கியது.
Susanna Ohlen (39) என்ற பிரபல ஜேர்மன் தொலைக்காட்சி நிருபர், ஜேர்மனியிலுள்ள Bad Munstereifel என்ற நகரத்துக்கு நிகழ்ச்சி ஒன்றை உருவாக்கும் குழுவுடன் சென்றிருந்தார்.
அந்த நகர மக்கள், பெருவெள்ளத்தால் நிலைகுலைந்துபோன தங்கள் நகரத்தை தாங்களே சுத்தம் செய்து வருகிறார்கள்.
அதன் அடிப்படையில், ’பெருவெள்ளத்துக்குப் பின் நகரை சுத்தமாக்கும் மக்கள்: கைகொடுத்த தொலைக்காட்சி நிருபர்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றை உருவாக்க முடிவு செய்தது RTL என்ற தொலைக்காட்சி.
அப்போது, Susanna, தானும் நகரை சுத்தம் செய்வதுபோல காட்டுவதற்காக, தரையிலிருந்து சேற்றை எடுத்து தன் மீது பூசிக்கொண்டுள்ளார்.
அதற்குப் பிறகு, முகத்திலும் கைகளிலும் சேற்றுடன் அவர் செய்தியை வழங்க, செய்தியை ஒளிப்பதிவாளர் பதிவு செய்துள்ளார். ஆனால், Susanna தன் முகத்திலும் கைகளிலும் சேற்றைப் பூசிக்கொள்வதை அப்பகுதியிலிருந்த வீடு ஒன்றிலிருந்த ஒருவர் தனது மொபைலில் வீடியோ எடுத்துவிட்டார். அது தெரியாமல் Susanna தானும் நகரை சுத்தம் செய்ததுபோல பில்ட் அப் கொடுத்துள்ளார்.
ஆனால், அந்த வீடியோவை எடுத்தவர் அதை சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட, Susannaவின் வேஷம் கலைந்துவிட்டது. இந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, RTL தொலைக்காட்சி Susannaவை பணி நீக்கம் செய்துவிட்டது.
எங்கள் நிருபரின் செயல் பத்திரிகை தர்மத்தை மீறிவிட்டதுடன் எங்கள் தொலைக்காட்சியின் தரத்துடனும் முரண்படுகிறது. ஆகவே, அவரை பணி நீக்கம் செய்துள்ளோம் என தொலைக்காட்சி சேனல் தெரிவித்துள்ளது.
Susanna, 2008இலிருந்து RTL தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரிவதுடன், Good Evening RTL, Good Morning Germany ஆகிய பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        