தோல்வி பயம்... தேர்தல் முடிவை நிராகரிக்கத் தயாராகும் ட்ரம்ப் ஆதரவாளர்கள்
இந்த முறையும் ட்ரம்ப் தோல்வியடைந்தால் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவை நிராகரிக்க குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
போலியான கருத்துக்கணிப்புகள்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவு பெருகி வருவதாக போலியான கருத்துக்கணிப்புகள் சமீப நாட்களில் வெளியாகி வருவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில், நவம்பர் 5ம் திகதி முன்னெடுக்கப்பட இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தோல்வி அடைந்தால், தேர்தல் முடிவை நிராகரிக்க குடியரசுக் கட்சி ஆதரவாளர்கள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
மேலும், ட்ரம்புக்கு ஆதரவாக, மக்களை திசைதிருப்பும் வகையில் போலியான கருத்துக்கணிப்புகளுக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகள் நீதிமன்றத்தையும் நாடியுள்ளது.
மேலும், மக்களிடையே தமக்கு செல்வாக்கு இருந்தும், முறைகேடுகளால் தமது வெற்றி பறிக்கப்பட்டுள்ளது என ட்ரம்ப் வாதிடக் கூடும் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகளில் வெற்றி தோல்வியை கணிக்க முடியாத அளவுக்கு மாபெரும் போட்டியாக இருக்கும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, கடும் போட்டி எதிர்பார்க்கப்படும் 7 மாகாணங்களில் இருவரும் சம பலத்துடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் குடியரசுக் கட்சிக்கு ஆதரவான சில அமைப்புகள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்புகளில், இந்த 7 மாகாணங்களிலும் ட்ரம்ப் முன்னிலையில் உள்ளார் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் ஆதரவு அமைப்புகள்
மேலும், ட்ரம்புக்கு ஆதரவு பெருகி வருவதாக வெளியாகும் கருத்துக்கணிப்புகளால், அவரது ஆதரவாளர்களும் பெரும் நம்பிக்கையில் உள்ளனர். இதையே, வியாழக்கிழமை நியூ மெக்சிகோவில் நடைபெற்ற பேரணியில் ட்ரம்ப் பதிவு செய்துள்ளார்.
நாம் முன்னிலையில் உள்ளோம், இதுவரை வெளியான அனைத்து கருத்துக்கணிப்புகளும் அதையே வெளியிட்டுள்ளது என்றார். போலியான கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு, மக்களை குழப்பும் வேலையை ட்ரம்ப் ஆதரவு அமைப்புகள் முன்னெடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் செல்வாக்கு இருந்தும் ட்ரம்ப் தோல்விக்கு முறைகேடுகளே காரணம் என வாதிடக் கூடும் என்றும் சில தேர்தல் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே 2020 ஜனாதிபதி தேர்தலில், முறைகேடுகளால் ஜோ பைடன் வெற்றி பெற்றார் என்றே டொனால்டு ட்ரம்ப் இதுவரை நம்பி வருகிறார். தற்போதும், அவர் தோல்வி அடைந்தால், மீண்டும் முறைகேடுகளால் தாம் தோல்வியடைந்ததாக தேர்தல் முடிவுகளை அவர் நிராகரிக்கக் கூடும் என கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |