நியூயார்க் மேயராக தெரிவான மம்தானியின் குடியுரிமையைப் பறிக்க ட்ரம்ப் கட்சியினர் தீவிரம்
நியூயார்க் நகரின் முதல் தெற்காசிய வம்சாவளி மேயராக தெரிவாகியுள்ள ஜோஹ்ரான் மம்தானியை பொறுப்புக்கு வர அனுமதிக்கப்போவதில்லை என குடியரசுக் கட்சியினர் சபதம் செய்துள்ளனர்.
அச்சுறுத்திய ட்ரம்ப்
நியூயார்க் நகரின் முதல் இஸ்லாமிய மேயராக தெரிவாகியுள்ள மம்தானி, ஜனவரி 1 ஆம் திகதி மேயராக பொறுப்புக்கு வரவிருக்கிறார். ஆனால், மம்தானி வெற்றி பெற்றால் நியூயார்க் நகரத்திற்கான ஃபெடரல் நிதியை நிறுத்தி வைப்பதாக அச்சுறுத்திய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,

மம்தானியின் குடியுரிமை பற்றிய தவறான கேள்விகளுக்கு நம்பகத்தன்மையை அளித்திருந்தார். அத்துடன், மம்தானி ஒரு இடதுசாரி சிந்தனையாளர் என்றும் குற்றஞ்சாட்டினார்.
இந்த நிலையில், சில குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மம்தானியின் குடியுரிமை குறித்து விசாரணை வேண்டும் என்றும் கோரியுள்ளனர். அத்துடன், அவரது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்து நாடு கடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டுமின்றி, மம்தானி கம்யூனிஸ்ட் மற்றும் பயங்கரவாத சித்தாந்தங்களை ஏற்றுக்கொண்டவர் என்றும் ஆதாரமின்றி அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
மம்தானி தனது குடியுரிமை ஆவணங்களில் பொய்யான தகவல்களை குறிப்பிட்டிருந்தால், அவர் அமெரிக்க குடிமகனாக முடியாது, மேலும் அவர் நிச்சயமாக நியூயார்க் நகர மேயர் பதவிக்கும் வர முடியாது என குடியரசுக் கட்சியின் Andy Ogles என்பவர் அக்டோபர் 29 ஆம் திகதி தெரிவித்திருந்தார்.

நம்பகமான ஆதாரங்கள்
அமெரிக்க குடியுரிமைக்காக கம்யூனிசம் அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளுடன் ஏதேனும் தொடர்புகள் இருந்தால் அதை வெளியிடப்பட வேண்டும். ஆனால், மம்தானி விவகாரத்தில் அவர் அவ்வாறு வெளிப்படுத்தியிருக்க வாய்ப்பில்லை என கூறும் Andy Ogles,
அது உறுதி செய்யப்பட்டால், அவரை உடனடியாக உகாண்டாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். ஆனால், PolitiFact முன்னெடுத்த விசாரணையில், மம்தானி தனது குடியுரிமை விண்ணப்பத்தில் பொய் சொன்னதற்கான நம்பகமான ஆதாரங்கள் எதுவும் சிக்கவில்லை என தெரிவித்துள்ளது.

உகாண்டாவில் இந்திய வம்சாவளி பெற்றோருக்கு பிறந்த மம்தானி தமது 7வது வயதில், 1998ல் அமெரிக்காவில் குடியேறினார். கடந்த 2018ல் அவர் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றார்.
18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அமெரிக்க குடிமக்களாக மாற, அவர்கள் பொதுவாக ஐந்து ஆண்டுகள் சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளராக நாட்டில் தொடர்ந்து வாழ்ந்திருக்க வேண்டும், அல்லது ஒரு அமெரிக்க குடிமகனை மணந்தால் மூன்று ஆண்டுகள் என்பது விதி.
ஒரு நபரின் குடியுரிமையை ரத்து செய்யும் செயல்முறையானது, நீதித்துறை உத்தரவால் மட்டுமே செய்ய முடியும். இந்த நிலையில், மம்தானியின் விண்ணப்பம் குறித்த ஓகிள்ஸ் மற்றும் ஃபைன் முன்வைத்துள்ள கோரிக்கைகளை ஆதரிக்கும் எந்த ஆதாரத்தையும் உறுதி செய்ய முடியவில்லை என்று குடிவரவு சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், மம்தானி நியூயார்க் மேயராக செயல்படப் போவது உறுதி என்றே அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |