பிரான்சில் வாழும் பிரித்தானியர்களுக்கு வாழிட உரிம அட்டை தொடர்பில் ஒரு முக்கிய அறிவிப்பு
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதிலிருந்தே, பிரான்சில் வாழும் பிரித்தானியர்கள் பல மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.
முதலில், 2020ஆம் ஆண்டு டிசம்பர் 31க்கு முன்னிருந்து பிரான்சில் வாழ்ந்து வரும் அனைத்து பிரித்தானியர்களும், 2021 அக்டோபர் 1ஆம் திகதிக்குள் carte de séjour என்னும் வாழிட உரிம அட்டை பெற்றிருக்கவேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டது.
இந்த விதி, 2020ஆம் ஆண்டு டிசம்பர் 31க்கு பிறகு பிரான்சுக்கு குடிபெயர்ந்தவர்களுக்குப் பொருந்தாது.
ஆனால், இன்னமும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படவேண்டியுள்ளதால், carte de séjour என்னும் வாழிட உரிம அட்டை பெறுவதற்கான காலக்கெடு 2022ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 1ஆம் திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், carte de séjour என்னும் வாழிட உரிம அட்டைக்கு விண்ணப்பிக்கும் திகதி, 2021 செப்டம்பர் 30ஆகவே நீடிக்கிறது. அதாவது, 2021 செப்டம்பர் 30க்குப் பின் அளிக்கப்பட்ட carte de séjour கோரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.
2022 ஜனவரி 1ஆம் திகதிக்குப் பின் என்ன நடக்கும்?
2022 ஜனவரி 1ஆம் திகதியிலிருந்தே, உங்கள் சட்டப்பூர்வ வாழிட உரிமத்திற்கான ஆதாரத்தை நீங்கள் சமர்ப்பிக்காவிட்டால் (மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாட்டவர்களல்லாதவர்களைப் போலவே) சில குறிப்பிட்ட அதிகாரப்பூர்வ விடயங்களை நீங்கள் செய்ய முடியாது.
அன்று முதல், உங்களிடம் சட்டப்படி சில காரணங்களுக்காக வாழிட உரிம அட்டையைக் காட்டும்படி கேட்கப்படலாம்.
எங்கெல்லாம் என்றால்...
- உங்களுக்கு பிரான்சில் வேலை செய்ய உரிமை உள்ளதா என்பதை தெரிந்துகொள்வதற்காக வேலை வழங்குவோர் அதைக் கேட்கலாம்.
- உங்களுக்கு வீடு வாடகைக்கு விட்டவர்,
- CAF அலுவலகத்தில் நீங்கள் நிதி உதவி பெறும் பட்சத்தில்,
- உங்களுக்கு பிரான்சில் மருத்துவ உதவி பெறுவதற்கு உரிமை உள்ளதா என்பதை அறிவதற்காக CPAM அலுவலகத்தில்,
- பிரெஞ்சு பொலிசார் யாரை வேண்டுமானாலும் வழியில் நிறுத்தி அடையாள அட்டையையோ, வாழிட உரிமத்தையோ கேட்கலாம்,
நீங்கள் வாழிட உரிம அட்டையை காட்டாவிட்டால், உங்களுக்கு அவசர மருத்துவ உதவி, வேலை, உதவிகள் மற்றும் வாடகைக்கு வீடு கூட மறுக்கப்படலாம். பிரான்சை விட்டு வெளியேறுமாறு சட்டப்படி நீங்கள் கேட்டுக்கொள்ளப்படலாம் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.