கனடாவில் இலங்கை உணவு ஒன்றுக்கு பிரபலமான ஒரு உணவகம்: நாவில் எச்சிலை ஊறவைக்கும் ஒரு செய்தி
உலகின் எந்த பகுதியானாலும் சரி, உணவுப்பிரியர்களின் ஒரு கூட்டம் அங்கு இருக்கத்தான் செய்யும். வெளி உலகுக்கு தங்களை முரட்டுத்தனமாக காட்டிக்கொள்ளும் மனிதர்கள் கூட, தங்கள் வீட்டு உணவுக்கு அடிமையாக இருந்த தகவல்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
அதுவும், தாய் கையால் சாப்பிடும் உணவுக்கும், தாய்நாட்டு உணவுக்கும் ஈடு இணையே கிடையாது எனலாம்.
ஒரு காலத்தில் மேற்கத்திய நாடுகளுக்குச் செல்லும் நம்மவர்கள், அங்கே உணவுக்காக அல்லாடிய காலகட்டங்கள் இருந்ததுண்டு. இறைச்சியை வேகவைத்து அதன் மீது உப்பையும் மிளகையும் தூவி, அது ஒரு உணவு... உருளைக்கிழங்கை வேகவைத்து அதன் மீது உப்பையும் மிளகையும் தூவி, அது ஒரு உணவு... பச்சைக்காய்கறிகளை வெட்டி, மேலே உப்பும் மிளகும் தூவி, அது ஒரு உணவு என தினமும் சாப்பிட்டு, எப்போது தாய்நாட்டுக்குத் திரும்புவோம் என ஏங்கிய நாட்களைக் குறித்து வெளிநாடு சென்றவர்கள் கதை கதையாய் கூறியிருக்கிறார்கள். அது ஒரு காலம்...
ஆனால், இப்போது நம்மவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று, அங்கே சின்னச் சின்னதாய் ஆரம்பித்த பல உணவகங்கள் இன்று நம்மை மட்டுமல்ல, வெளிநாட்டவர்களையும் அங்கு கவர்ந்திழுப்பதைக் காணலாம்.
அப்படி கனடாவின் Scarborough பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு உணவகம்தான் Ruchi Take-Out and Catering. இது 3580 McNicoll Avenueவில் அமைந்துள்ளது. இந்த குறிப்பிட்ட உணவகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு உணவு ஆப்பம்...
ஆப்பம் என்பது தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் பிரசித்தி பெற்ற ஒரு உணவு என்பதை பலரும் அறிந்திருக்கலாம். ஆக, தென்னிந்தியர்களானாலும் சரி, இலங்கையர்களானாலும் சரி, வீட்டு சாப்பாடு நினைவுக்கு வந்தால் இந்த உணவகத்துக்குச் செல்லலாம்.
காலை சிற்றுண்டியானாலும் சரி, இரவு உணவானாலும் சரி, ஆப்பம் கோழிக்கறி அல்லது ஆட்டுக்கறி, முட்டையை உடைத்து ஊற்றி தயாரிக்கப்பட்ட ஆப்பம், தேங்காய்ப்பாலுடன் ஆப்பம் என பல வகையில் ஆப்பத்தை சுவைக்கலாம்.
பல இடங்களில் ஆப்பம் கிடைக்கும் என்றாலும், அவை முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு கண்டெய்னர்களில் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். ஆகவே அவை வழக்கமான ஆப்பத்தைப்போல் இல்லாமல் தட்டையாக இருக்கும். ஆனால் இந்த கடையில் அவ்வப்போது சுடச்சுட ஆப்பம் தயாரித்துக்கொடுக்கப்படுவதால், அவை நடுவில் மென்மையாகவும், ஒரங்களில் மொறுமொறுப்பாகவும் இருக்கும். உங்களுக்கு விரும்பிய கறியுடன் அதை உண்ணலாம் என்கிறார் இந்த உணவகத்தில் சாப்பிட்ட சமூக ஊடகப் பிரபலம் ஒருவர்.