சமையல்காரரை கண்டுபிடித்து தருவோருக்கு சன்மானம்: அறிவித்த சுவிஸ் ஹொட்டல்
சுவிட்சர்லாந்தில் ஊழியர் பற்றாக்குறை காரணமாக ஹொட்டல் உரிமையாளர் ஒருவர் நூதன விளம்பரம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். ஹொட்டல் தொழிலில் ஈடுபட ஆட்கள் பற்றாக்குறை காரணமாக சுவிஸில் பல ஹொட்டல்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தொடர்பில் பல ஹொட்டல்கள் மூடப்பட்டு, அங்குள்ள ஊழியர்கள் வேறு தொழில் தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டதாலையே, தற்போது ஹொட்டல் தொழிலில் ஈடுபட ஊழியர்களை தேடும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஹொட்டல் உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வாலைஸ் மாநிலத்தில் ஹொட்டல் மேலாளர் ஒருவர் காலியிடங்களை நிரப்ப நூதன பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்.
Bürchen பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் சமையல்காரரை ஏற்பாடு செய்து தரும் ஒருவருக்கு 1000 பிராங்குகள் சன்மானம் அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கள் உணவகத்தில் சமையல் ஊழியர்களை பணியமர்த்த போராடி வந்துள்ளதாக அந்த மேலாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கண்டிப்பாக தங்களின் முயற்சி பலன் தரும் என்றே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.