பன்னீர் இருந்தால் போதும்... அட்டகாசமான சுவையில் கட்லெட் செய்திடலாம்
பொதுவாகவே அனைவருக்கும் மாலை நேரத்தில் ஏதாவது சாப்பிடனும் போலவே இருக்கும்.
அந்த நேரத்தில் உடனே செய்யக்கூடிய ஒரு சில உணவு வகைகளை செய்து தேநீருடன் அருந்துவார்கள்.
அந்தவகையில் பிரபல்யமானது தான் கட்லட். எப்போதுமே முட்டை வைத்து செய்வது தான் வழக்கம். அதற்கு மாறாக எப்படி பன்னீர் வைத்து செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
மசாலா செய்ய
- எண்ணெய்
- பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
- பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது
- இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- உப்பு - 1 தேக்கரண்டி
- சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
- கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
- சாட் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
- கேரட் - 1 துருவியது
- உருளைக்கிழங்கு - 1 வேகவைத்து துருவியது
- கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது
- பன்னீர் - 200 கிராம்
- பிரட் தூள் - 1/4 கப்
மைதா கலவை செய்ய
- மைதா - 1 மேசைக்கரண்டி
- சோள மாவு - 2 தேக்கரண்டி
- தண்ணீர்
செய்முறை
1. ஒரு அகல கடாயில் எண்ணெய் ஊற்றி, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
2. இப்போது இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, சீரக தூள், கரம் மசாலா தூள், சாட் மசாலா தூள் சேர்த்து கலந்து விடவும்.
3. அடுத்து துருவிய கேரட், வேகவைத்து துருவிய உருளைக்கிழங்கை சேர்த்து குறைந்த தீயில் வைத்து கலந்து விடவும்.
4. பிறகு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அணைத்து, மசாலாவை வேறு கிண்ணத்திற்கு மாற்றி ஆறவிடவும்.
5. ஆறியவுடன் பன்னீரை துருவி சேர்த்து கலந்து விடவும். பின்பு பிரட் தூளை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
6. பன்னீர் கலவையை சிறிதளவு எடுத்து உங்களுக்கு விருப்பமான வடிவில் கட்லெட் செய்து கொள்ளவும்.
7. மைதா கலவை செய்ய, ஒரு கிண்ணத்தில் மைதா, சோள மாவு, தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
8. பிரட் தூளை ஒரு தட்டில் எடுத்து கொள்ளவும். இப்போது பன்னீர் கலவையை எடுத்து, மைதா கலவையில் போட்டு, பிரட் தூளில் பிரட்டி எடுக்கவும். பின்பு செய்த கட்லெட்டை 15 நிமிடம் பிரிட்ஜில் வைக்கவும்.
9. சூடான எண்ணெயில் கட்லெட்களை போட்டு, குறைந்த தீயில், பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |