வெளிநாட்டு மாணவர்களுக்கு இனி கட்டுப்பாடு: பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தீவிரம்
பிரித்தானியாவில் புலம்பெயர்வோர் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கும் நோக்கில் வெளிநாட்டு மாணவர்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க பிரதமர் ரிஷி சுனக் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசாக்களுக்கு கட்டுப்பாடு
பிரதமர் அலுவலகமும் குறித்த தகவலை உறுதி செய்துள்ளதுடன், இது தொடர்பில் தற்போது எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால், ரிஷி சுனக் முன்வைத்துள்ள இந்த திட்டமானது பல பல்கலைக்கழகங்கள் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட வாய்ப்புள்ளதாக புலபெயர்வோர் தொடர்பில் அரசுக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
@getty
வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை குறைப்பது என்பது உயர் தரப் பல்கலைக்கழகங்களில் சேர்க்கையைக் கட்டுப்படுத்துவதுடன், மாணவர்களைச் சார்ந்திருப்பவர்களுக்கான விசாக்களைக் கட்டுப்படுத்துவதாகும்.
ஏற்கனவே, மாணவர்களுக்கான விசாவில் அவர்களின் உறவினர்களை நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கை தொடர்பில் உள்விவகார அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் புகார் தெரிவித்திருந்தார்.
புலம்பெயர் மக்களின் தேவை
ரிஷி சுனாக் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையை குறைக்கும் திட்டத்தை வகுத்துவரும் நிலையில், நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க குடியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தற்போதைய தேவை என்று நிதியமைச்சர் ஜெர்மி ஹன்ட் கடந்த வாரம் வலியுறுத்தியிருந்தார்.
@AFP
அடுத்த பல ஆண்டுகளுக்கு புலம்பெயர் மக்களின் தேவை நாட்டுக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனிடையே, பிரித்தானிய மக்களுக்கு கல்வி புகட்டுவதால் ஏற்படும் நிதியிழப்பை ஈடுகட்ட, வெளிநாட்டு மாணவர்களிடம் பெருந்தொகையை கட்டணமாக வசூலிப்பதாக பல முன்னணி பல்கலைக்கழகங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.
கடந்த 2020 மற்றும் 2021ல் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கட்டணமாக மட்டும் 9.95 பில்லியன் பவுண்டுகளை செலுத்தியுள்ளனர்.
இதே காலகட்டத்தில் முதன்மை பலகலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையானது 605,130 என தெரியவந்துள்ளது.