சுவிட்சர்லாந்தில் மார்ச் 1ம் திகதி முதல் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்! வெளியான முக்கிய அறிவிப்பு
கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக மார்ச் 1 முதல் சுவிட்சர்லாந்தில் கடைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் விளையாட்டு மையங்களை மீண்டும் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
கொரோனாவின் 3வது அலைக்கு வழிவகுக்காமல் பொருளாதாரம் மற்றும் சமூகத்தை படிப்படியாக இயல்பு நிலைக்கு கொண்டு வரும் நோக்கத்தோடு புதன்கிழமை சுவிஸ் மத்திய குழு கட்டுப்பாடுகளை தளர்த்தும் திட்டத்தை வெளியிட்டது.
மார்ச் 1ம் திகதி முதல் நோய்த்தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய குழு முடிவெடுத்துள்ளது
அதன் படி, மார்ச் 1ம் திகதி முதல் வெளிப்புற நிகழ்வுகளில் 15 பேர் வரை பங்கேற்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, 18 வயது வரையிலான இளைஞர்கள் மீண்டும் பெரும்பாலான விளையாட்டு மற்றும் கலாச்சார நடவடிக்கைகளைத் தொடங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கடைகள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள், வெளிப்புற பகுதிகளான உயிரியல் மற்றும் தாவரவியல் பூங்காக்களை திறக்கலாம்.
ice rinks, டென்னிஸ் மற்றும் கால்பந்து மைதானங்கள் அல்லது தடகள அரங்கங்கள் போன்ற விளையாட்டு மைதானங்களையும் மீண்டும் திறக்கலாம். ஆனால், அதிகபட்சம் ஐந்து பேர் கொண்ட குழுக்கள் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படும்.
பிரபலமான விளையாட்டுபோட்டிகள் மற்றும் நிகழ்வுகள் அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறக்கப்படும் அனைத்து இடங்களிலும் முகக் கவசம், சமூக இடைவெளி உட்பட தேவையான கட்டுப்பாடுகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இருப்பினும், உணவகங்கள் மூடப்பட்டிருக்கும், மேலும் வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டம் தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் அரசாங்கம் இறுதி முடிவை எடுப்பதற்கு முன் நாட்டின் 26 மண்டலங்களுக்கு இந்த திட்டங்களை அனுப்பி ஆலோசனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்டமாக கட்டுப்பாடுகளை தளர்த்தும் நடவடிக்கை ஏப்ரல் 1ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நோய்த்தொற்றுகள், மருத்துவமனையில் சேர்க்ப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் R எண் உள்ளிட்ட முக்கிய காரணிகளின் அடிப்படையில் கட்டுப்பாடுகளை தளர்த்தும் திட்டத்தை பல கட்டங்களாக சுவிஸ் அரசாங்கம் அறிவித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.