மீண்டும் தலைதூக்கும் பயங்கர நோய்கள்... கனேடிய நகரங்கள் பலவற்றில் மேற்கொள்ளப்பட இருக்கும் நடவடிக்கை
*பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் போலியோ கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
*கனடாவிலும் அவை உள்ளனவா என்பதை அறிய ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டன என நம்பப்பட்டு வந்த நோய்கள் சில, தற்போது மீண்டும் தலைதூக்கத் துவங்கியுள்ளன.
குறிப்பாக, குழந்தைகளைத் தாக்கி நிரந்தரமாக உடற்குறைபாட்டையோ அல்லது மரணத்தையோ ஏற்படுத்திவிடும் போலியோ என்னும் நோய்க்கிருமிகள் சமீப காலமாக கண்டுபிடிக்கப்பட்டு வரும் விடயம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், பிரித்தானியாவில் 40 ஆண்டுகளுக்குப் பின் போலியோ நோய்க்கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் நினைவிருக்கலாம்.
Dr. Karp/Emory University/CDC via AP, File
ஜூலை மாதம் 21ஆம் திகதி, அமெரிக்க நகரமான நியூயார்க்கில் கழிவுநீரில் மேற்கொண்ட ஆய்வில் போலியோ வைரஸ்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கனடாவைப் பொருத்தவரை 1994ஆம் ஆண்டுடன் போலியோ ஒழிக்கப்பட்டுவிட்டது. என்றாலும், மற்ற நாடுகளில் மீண்டும் போலியோ கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கனடாவிலும் போலியோ திரும்பவும் தலைதூக்கக்கூடும் என கனடா சுகாதார ஏஜன்சி எச்சரித்துள்ளது.
ஆகவே, கனடாவில் நகரங்கள் பலவற்றில், கழிவுநீரில் போலியோ வைரஸ்கள் காணப்படுகின்றனவா என்பதை அறிவதற்கான ஆய்வுகள் துவங்க உள்ளதாக கனடா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதாவது, ஒரு சமுதாயத்தில் போலியோ நோய்க்கிருமிகள் இருக்குமானால், அவை கழிவுநீரில் வெளியாகியிருக்கும். ஆகவே, கழிவுநீரை சோதனை செய்வதன் மூலம் அந்த சமுதாயத்தில் போலியோ கிருமிகள் இருக்கின்றனவா என்பதை அறிவியலாளர்களால் அறிந்துகொள்ளமுடியும் என்பதாலேயே கழிவுநீரில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.