சுவிட்சர்லாந்தில் வங்கிக்கணக்கு துவக்கும் அமெரிக்க பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
அதிக எண்ணிக்கையிலான அமெரிக்க பணக்காரர்கள் தங்கள் பணத்தை பன்முகப்படுத்தவும், அமெரிக்காவில் உள்ள அபாயங்களுக்கு எதிராகப் பாதுகாக்கவும் சுவிஸ் வங்கிகளை நோக்கித் திரும்பி வருகின்றனர்.
சுவிட்சர்லாந்தில் வங்கிக்கணக்கு துவக்கும் அமெரிக்க பணக்காரர்கள்
பொருளாதார, அரசியல் மற்றும் மூலோபாய நோக்கங்களுக்காக சமீபத்திய மாதங்களில் சுவிட்சர்லாந்தில் வங்கிக்கணக்கு துவக்கும் அமெரிக்க பணக்காரர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுவிஸ் நிதி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
சுவிஸ் நிதி ஆலோசனை நிறுவனமான Alpen Partners Internationalஇன் தலைமை நிர்வாக அதிகாரி Pierre Gabris கூறும்போது, பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது பெருமளவில் அமெரிக்கர்கள் சுவிட்சர்லாந்தில் வங்கிக்கணக்கு துவக்குவதைக் கண்டோம்.
பின்னர் கோவிட் காலகட்டத்தில் அதேபோல நடந்தது. இப்போது ட்ரம்பின் வரிவிதிப்புகளைத் தொடர்ந்து மீண்டும் அதே நிலை உருவாகியுள்ளது என்கிறார்.
காரணம் என்ன?
இப்படி அமெரிக்க பணக்காரர்கள் சுவிட்சர்லாந்தில் வங்கிக்கணக்கு துவக்குவது அதிகரித்துள்ளதற்கான காரணம் என்ன?
அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன என்கிறார் Gabris. அமெரிக்காவின் தேசியக்கடன் அதிகரித்துவரும் நிலையில், அமெரிக்க டொலரின் மதிப்பு வீழ்ச்சி அடையுமோ என அஞ்சி, சிலர் தங்கள் சொத்துக்களை வேறு பக்கம் நகர்த்த முயல்கிறார்கள்.
பலர் தங்கள் சொத்துக்களில் 100 சதவீதமும் அமெரிக்க டாலர்களில் இருப்பதை உணர்ந்து, அதை பன்முகப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றும் Gabris கூறுகிறார்.
சுவிட்சர்லாந்தின் நடுநிலை அரசியல் நிலைப்பாடு, பொருளாதார ஸ்திரத்தன்மை, வலுவான நாணயம் மற்றும் வலுவான சட்ட உள்கட்டமைப்பு ஆகியவை அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு ஒரு பிளான் B ஆக அமைகின்றது.
மற்றவர்கள் அரசியல் தொடர்பிலான கவலைகளாலும், டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் சட்டத்தின் ஆட்சி பலவீனமடைவது அதிகரித்துவருவதாக நம்புவதாலும் ஒரு பிளான் B ஆக தங்கள் பணத்தை சுவிட்சர்லாந்துக்கு கொண்டுவருகிறார்கள்.
இன்னொரு முக்கிய விடயம் என்னவென்றால், இன்று சுவிஸ் வங்கிக் கணக்கைத் திறப்பது மிகவும் வெளிப்படையான ஒன்றாக மாறியுள்ளது. அது அமெரிக்கர்களுக்கு தேவையான ஒன்றாக உள்ளது.
ஆக, இப்படி பல்வேறு காரணங்களால் சுவிட்சர்லாந்தில் வங்கிக்கணக்கு துவக்கும் அமெரிக்க பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |